ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள சூரன்கோட் பகுதியில், ராணுவம் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் பதுங்கிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த சோதனையின் போது, ஐந்து மேம்படுத்தப்பட்ட வெடிபொருட்கள் (IEDs), தகவல் தொடர்பு சாதனங்கள் மற்றும் பல வகையான சந்தேகத்திற்கிடமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மூன்று டிபன் பாக்ஸ், இரண்டு எஃகு வாளிகளில் இந்த வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஏப்ரல் 22 அன்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த பின்னர், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு படைகள் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன. குறிப்பாக பயங்கரவாதிகள் பயன்படுத்திய தங்குமிடங்களை இடிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு கொடுப்பவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவு வழங்கும் சமூக வட்டாரங்களை அழிக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டின் எல்லைகளில் இருந்து வரும் பயங்கரவாதத்திற்கெதிராக இதுபோன்ற டவடிக்கைகள் தொடரும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் தாக்குதலை கண்டித்து, “கொலையாளிகள் பூமியின் கடைசி வரை துரத்தப்படுவார்கள்” என உறுதியளித்துள்ளார்.
இந்தச் சோதனைகள் மற்றும் பறிமுதல் நடவடிக்கைகள், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தரவுகளின் அடிப்படையில் திட்டமிட்டவையாகும். வெடிபொருட்கள் மற்றும் தகவல் சாதனங்களை கைப்பற்றியதால், எதிர்காலத்தில் நடைபெறவிருந்த தாக்குதல்களை தடுக்கும் வகையிலும், பின்னணி தொடர்புகளைக் கண்காணிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் நிலவும் பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு, மேலும் பல சோதனைகள் நடைபெறவிருக்கின்றன.