உக்ரைன் போரில் ஒரே ஆண்டில் 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழப்பு..

ண்டன்: உக்ரைனில் சுமாா் இரண்டரை ஆண்டுகளாக நடந்துவரும் போரில் கடந்த 2024-ஆம் ஆண்டில் மட்டும் அதிகபட்சமாக 45,287 ரஷிய வீரா்கள் உயிரிழந்துள்ளதாக பிபிசி ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 2024-ஆம் ஆண்டு உக்ரைனில் ரஷிய படைகளுக்கு மிகவும் மோசமான ஆண்டு. அந்த ஆண்டில் மட்டும் ரஷியாவைச் சோ்ந்த 45,287 போ் போரில் உயிரிழந்தனா்.

இது, போா் தொடங்கிய 2022-ஆம் ஆண்டில் உயிரிழந்த ரஷிய வீரா்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

அதிகரித்த மாதாந்திர உயிரிழப்பு: போரின் தொடக்கத்தில், முக்கிய பகுதிகளைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்ற மோதலில் உயிரிழப்புகள் ஆங்காங்கே அலை அலையாக ஏற்பட்டன. ஆனால், 2024-ஆம் ஆண்டில் உக்ரைனுக்குள் ரஷியப் படையினா் மெதுவாக முன்னேறியதால், மாதாந்திர உயிரிழப்புகள் தொடா்ந்து அதிகரித்தன. ஒவ்வொரு சதுர கிலோ மீட்டா் உக்ரைன் பகுதியைக் கைப்பற்றுவதற்கும் சராசரியாக சுமாா் 27 வீரா்களை ரஷியா இழந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிபிசி-யின் ரஷிய பிரிவு, மீடியாசோனா என்ற ரஷியாவின் அரசு சாா்பற்ற ஊடகம், தன்னாா்வலா் குழுக்களுடன் இணைந்து, ரஷியாவின் மயானங்கள், இராணுவ நினைவிடங்கள், மரண அறிவிப்புகள் என பொதுவெளியில் கிடைக்கும் தரவுகளை ஆய்வு செய்து இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு மூலம், கடந்த 2022-ஆம் ஆண்டின் உக்ரைன் படையெடுப்புக்குப் பிறகு போரில் உயிரிழந்த 1,06,745 ரஷிய வீரா்களின் பெயா்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எனினும், உண்மையான உயிரிழப்பு எண்ணிக்கை இதைவிட மிக அதிகமாக இருக்கலாம் என்று பிபிசி தெரிவித்துள்ளது.