தீவிரவாதத்துக்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அதிபர் விளாடிமிர் புதின் வாக்குறுதி அளித்துள்ளார்.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் அன்றைய தினமே கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறும்போது, ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். இந்தியாவுக்கு ரஷ்யா எப்போதும் பக்கபலமாக இருக்கும்’ என்று தெரிவித்தார்.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நேற்று தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அதிபர் புதின் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார். தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ரஷ்யா முழு ஆதரவு அளிக்கும் என்று அவர் வாக்குறுதி அளித்தார். தீவிரவாத தாக்குதலில் தொடர்புடையவர்கள், அதன் பின்னணியில் இருப்பவர்களை நீதியின் முன்பு நிறுத்த வேண்டும் என்று புதின் வளியுறுத்தினார். இவ்வாறு ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.
ரஷ்ய அதிபர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, இரண்டாம் உலகப்போரில் ரஷ்யா வெற்றி பெற்றதன் 80-வது ஆண்டு தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
நடப்பாண்டில் இந்தியா, ரஷ்யா உச்சி மாநாடு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை அதிபர் புதின் ஏற்றுக் கொண்டார். இவ்வாறு ரஷ்ய அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் விவகாரத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய சர்வதேச நீதிமன்றம் கடந்த 2023-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதன்காரணமாக வெளிநாடுகளுக்கு செல்வதை அவர் தவிர்த்து வருகிறார். எனினும் நெருங்கிய நட்பு நாடான இந்தியா வருவதற்கு அவர் ஒப்புக் கொண்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் அதிபர் புதின் டெல்லிக்கு வருகை தந்தார். அப்போது 28 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்த முறை அவர் இந்தியாவுக்கு வரும்போது பல்வேறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாரவ் சில நாட்களுக்கு முன்பு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் தொலைபேசியில் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதுகுறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா, பாகிஸ்தான் இடையே பதற்றம் எழுந்திருக்கிறது. இந்த விவகாரத்தில் இரு நாடுகளும் விரும்பினால் ரஷ்யா சமரசத்தில் ஈடுபட தயாராக இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சர் நகாடானி டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது நகாடானி கூறும்போது, ‘இந்தியாவும் ஜப்பானும் மிக நெருங்கிய நட்பு நாடுகள். சர்வதேச, பிராந்திய விவகாரங்களில் இரு நாடுகளும் இணைந்து பணியாற்றி வருகின்றன. பஹல்காம் தீவிரவாத தாக்குதலை ஜப்பான் மிக வன்மையாக கண்டிக்கிறது. தீவிரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் போருக்கு ஜப்பான் முழுஆதரவு அளிக்கும்’ என்று தெரிவித்தார்.