பஹல்காம் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு கடந்த மூன்றாம் தேதி அன்று எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி இருந்தது. இந்நிலையில் இன்றும் (05/05/2025) இரண்டாவது முறையாக ஏவுகணை சோதனை நடத்தப்பட்டுள்ளது. 120 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஏவுகணைகளை பாகிஸ்தான் சோதித்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது.தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வரும் நிலையில் டெல்லியில் இன்று பிரதமர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் குழுவினர் சந்திப்பு மேற்கொண்டிருந்தனர். இந்நிலையில் நாடு முழுவதும் நாளை (07/05/2025) நாடு தழுவிய ஒத்திகைக்கு அறிவுரை வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவுரை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி வான்வெளி தாக்குதல் குறித்து எச்சரிக்கை சைரன்களை இயக்கி ஒத்திகை செய்வது; தங்களை தாங்களே பாதுகாத்தல் குறித்த பயிற்சியை மக்களுக்கு தரவது; முக்கிய தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றை எதிரிகள் கண்ணில் இருந்து மறைக்க ஏற்பாடு செய்வது தொடர்பான ஒத்திகை; போர் நேரத்தில் அவசரக் காலத்தில் மக்களைப் பாதுகாப்பாக எப்படி வெளியேற்றுவது என்பது குறித்த ஒத்திகை; எதிரிகள் தாக்குதலின் போது மின்விளக்குகளை அணைப்பது குறித்த ஒத்திகை; உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை சேமித்து வைப்பது; தாக்குதல் நடந்தால் தீயணைப்பு துறை, பேரிடர் மீட்புத்துறை எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்த ஒத்திகை உள்ளிட்ட பாதுகாப்பு ஒத்திகைகளை மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.