மதுரை: நீட் நுழைவுத் தேர்வில் பீர், ரம், பிராந்தி குறித்து மாணவர்கள் விடையளிக்கும் வகையில் ஒரு வினா இடம் பெற்றிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ படிப்புக்கான நீட் எனும் நுழைவுத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. இதில் 22 லட்சம் பேர் எழுதினர். தமிழகத்தில் 1.5 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர்.
சென்னையில் 21,920 பேர் இந்த தேர்வை எழுதினர். இந்த நிலையில் 720 மதிப்பெண்களுக்கான 180 வினாக்களுக்கு விடையளிக்கும் வகையில் இருந்தது. ஒரு வினாவுக்கு 4 மதிப்பெண்கள், தவறான வினாவிற்கு ஒரு நெகட்டிவ் மதிப்பெண் வழங்கப்படும்.
இந்த தேர்வு சற்று கடினமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர். நீட் தேர்வுக்காக பல லட்சங்களை செலவு செய்து மாணவர்கள் படித்தனர். இந்த நிலையில் வினாத்தாளில் 117ஆவது கேள்வியாக ஈஸ்ட்டால் தயாரிக்கப்படும் ஆல்கஹால் இல்லாத மதுபானம் எது என கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு 4 விடைகள் கொடுக்கப்பட்டிருந்தன. அதில் பீர், ரம், பிராந்தி, விஸ்கி ஆகியவை ஆகும். இந்த 4 விடைகளில் சரியானதை தேர்வு செய்து எழுத வேண்டும். இந்த கேள்விக்கு விடை பீர் என்பதாகும். இதை சரியாக எழுதியிருந்தால் 4 மதிப்பெண்கள் கிடைக்கும்.
இந்த கேள்விக்கு கல்வியாளர்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்களில் இருந்து கேள்வி கேட்க எத்தனையோ இருக்கும் நிலையில் மதுபானம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக கூறுகிறார்கள்.
அது போல் வருங்கால மருத்துவர்களிடம் இப்படி ஒரு கேள்வியை கேட்கலாமா. வேண்டுமானால் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலாவது கேட்டிருக்கலாம். ஆங்காங்கே மது, போதை பொருட்கள், புகைப்பழக்கம் உள்ளிட்டவைகளால் மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இப்படிப்பட்ட வினாவை தவிர்த்திருக்கலாம் என கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
இன்னும் சிலரோ ஆல்கஹால், non – alcohol குறித்து பாடத்தில் வருகின்றனவே அதை வைத்தும் கேட்டிருக்கலாம் என்கிறார்கள். எது எப்படியோ இது தவறு என்றே பலர் கருத்து தெரிவிக்கிறார்கள்.