இந்திய எல்லையை நெருங்கும் பாகிஸ்தான் விமானப்படை விமானங்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்.!

ம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் நடந்த நிலையில், பாகிஸ்தான் தனது விமானப்படை விமானங்களை இந்திய எல்லையை ஒட்டி அமைந்துள்ள விமானப்படை தளங்களை நோக்கி நகர்த்தியிருப்பதாக பிளைட் ரேடார் தரவுகளை சுட்டிக்காட்டி பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம், இந்தியாவின் முக்கிய கோடைக்கால சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். தற்போது கோடைக் காலம் என்பதால் நாடு முழுவதிலும் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் காஷ்மீருக்கு செல்கிறார்கள்.

குறிப்பாக மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கபடும் பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். இந்த நிலையிதான், நேற்று பஹல்காமில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்து இருந்த நிலையில், பைசரன் மலைப்பகுதியில் பைன் மரக்காட்டு பகுதியில், திடீரென ஆயுதங்களுடன் வந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளை கண்மூடித்தனமாக சுட்டனர். இதில், சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை இந்த கொடூர சம்பவம் ஏற்படுத்தியது. சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பா (LeT) இன் பினாமி அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) அமைப்புதான் இந்த கொடூர தாக்குதலுக்கு பொறுப்பு ஏற்றுள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக காஷ்மீர் சென்று அங்கு அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளர். சவுதி அரேபியா சென்ற பிரதமர் மோடியும் தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவசர அவசரமாக நாடு திரும்பியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா எப்படி பதிலடி கொடுக்கப்போகிறது என்ற விவாதங்கள் அதிகரித்துள்ளன. நேரடியாக பாகிஸ்தான் உள்ளே புகுந்து ஹபீஸ் சயீத்தின் லஷ்கர்-இ-தொய்பாவின் (எல்இடி) பினாமி அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (டிஆர்எஃப்) மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்துவது, பாகிஸ்தான் இந்தியா எல்லையில் உள்ள தீவிரவாத அமைப்புகள் மீது இந்திய எல்லையை தாண்டாமல் வான்வெளி தாக்குதல்களை விமானம் மூலம் நடத்துவது.

சில நாட்கள் திட்டமிட்டு அதன்பின் இதற்கு காரணமான தீவிரவாதிகளை மட்டும் என்கவுண்டர் செய்வது என சில ஆப்ஷன்கள் இந்தியாவிடம் உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தானுக்குள் புகுந்து அங்குள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தியிருந்தது. இதனால், பயங்கரவாதிகளின் தற்போதைய அட்டூழியங்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு இருப்பதாக தெரிகிறது.

இதற்கிடையே, பஹல்காம் தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் பாகிஸ்தான் ராணுவ விமானங்களை ஜம்மு காஷ்மீர் எல்லையை ஒட்டி அமைந்து இருக்கும் விமானப்படை தளங்களை நோக்கி நகர்த்தியுள்ளதாக சமூக வலைத்தள பதிவுகள் கூறுகின்றன. விமான கண்கானிப்பு இணையமான Flightradar24- ல் பதிவான தரவுகளை வைத்து இந்த பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

கராச்சியில் உள்ள தெற்கு கமாண்ட் தளத்தில் இருந்து வடக்கு பகுதிக்கு லாகூர் மற்றும் ராவல்பிண்டிக்கு விமானப்படை விமானங்கள் புறப்பட்டு செல்லும் தரவுகள் அடங்கிய ஸ்கிரின் ஷாட்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. இந்த விமானப்படை தளங்கள் எல்லாம் இந்தியாவின் எல்லையை ஒட்டி அமைந்துள்ளன. எனினும் இது தொடர்பாக பாகிஸ்தான் தரப்பு அதிகார்ப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதற்கிடையே, காஷ்மீரில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலாப்பயணிகள் உயிரிழந்தது இருப்பது வருத்தமளிப்பதாக கூறியுள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துள்ளது.