‘வதந்திகளை நம்பவேண்டாம்..’ 1 முதல் 9ம் வகுப்பு வரை இறுதி தேர்வு கட்டாயம் நடத்தப்படும்-கல்வி அமைச்சர் அறிவிப்பு ..!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு பள்ளிக் கல்வித்துறை 1 முதல் 5ம் வகுப்பு வரை இறுதி தேர்வு நடைபெறாது என அறிவித்துள்ளதாக நேற்று செய்திகள் பரவின.

மேலும், ‘ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புகளுக்கு மே மாதம் 5 முதல் 13ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெறும். அதேபோல் ஒன்பதாம் வகுப்புக்கான செய்முறை தேர்வு மே மாதம் 2ம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடைபெறும். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 30-ஆம் தேதி வெளியிடப்படும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு ஆண்டு இறுதித்தேர்வு இல்லை. 2022-2023 ஆம் கல்வியாண்டு 11 ஆம் வகுப்பு தவிர பிற வகுப்புகளுக்கு ஜூன் 13 முதல் தொடங்கும். பதினொன்றாம் வகுப்புக்கு ஜூன் 24 முதல் வகுப்புகள் தொடங்கும் என தகவல்கள் பரவின.

இந்நிலையில் இன்று புதுகோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ‘1 முதல் 9ம் வகுப்பு வரை நிச்சயம் இந்த ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும். பாடத்திட்டம் ஏற்கனவே குறைக்கப்பட்ட நிலையில் அதன் அடிப்படையில் தேர்வு நடைபெறும். 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான இறுதித் தேர்வு நடைபெறாது எனும் வதந்திகளை யாரும் நம்பவேண்டாம். ஆண்டு இறுதித் தேர்வு குறித்து இன்று மாலை அறிவிக்கப்படும்’ என்று தெரிவித்தார்.