எனக்கு வாக்கு அளிக்காதவர்களுக்கும் நான் தான் முதல்வர்- பதவியேற்ற பின் பகவந்த் மானின் முதல் உரை.!!

சண்டிகர்: ‘எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வராக இருப்பேன்’ என பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதையடுத்து, டெல்லியில் மட்டுமே ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும் ஆட்சி அமைக்கிறது.

பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பகவந்த் மான், இன்று பகத்சிங் பிறந்த ஊரான கத்கர் கலன் கிராமத்தில் முதலமைச்சராக‌ பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

பஞ்சாப் முதல்வராக பதவியேற்று, தன்னுடைய முதல் பேச்சை இன்று பதிவு செய்தார் பகவந்த மான். அப்போது, ”பஞ்சாப் மாநில மக்கள் அனைவருக்கும் நான் முதல்வர். ஆம் ஆத்மிக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வர். உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம். ஆம் ஆத்மி எம்.எல்.ஏ-க்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக்கொள்கிறேன், பஞ்சாப் மக்களிடம் திமிராக நடந்துகொள்ளாதீர்கள்.

பஞ்சாபில் விவசாயத்தை மேம்படுத்த உழைப்போம். பஞ்சாப் மாநிலத்தில் வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிப்போம். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம். பஞ்சபாபை மீண்டும் பழைய பஞ்சாபாக மாற்ற உறுதியேற்போம். பொற்கால பஞ்சாபை கொண்டுவருவோம். என்னுடன் சேர்ந்து 3 கோடி பஞ்சாபியர்கள் சத்தியம் செய்கிறார்கள். நாங்கள் பஞ்சாபுக்காக உழைப்போம். பஞ்சாப் மாநிலத்தில் படிந்துள்ள ஊழல் எனும் கறையை அகற்றுவோம்” என்று பேசியுள்ளார்.

1970க்குப் பிறகு பஞ்சாப் மாநிலத்தில் பதவியேற்கும் இளம் முதல்வர் பகவந்த் மான். இவருக்கு 48 வயது. பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்பதற்கு முன் மக்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். காமெடியனாக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி இன்று பஞ்சாப் முதல்வராக உயர்ந்திருக்கிறார் பகவந்த் மான்.

பதவியேற்புக்கு முன் பத்திரிக்கையாளர்களை சந்தித்தார் பகவந்த் மான். அப்போது, ”இந்த மாநிலத்தை எப்படி ஆள வேண்டும் என எங்களுக்குத் தெரியும். அதில் பெரிய நம்பிக்கை இருக்கிறது. 7 ஆண்டுகள் எம்.பி-யாக இருந்துள்ளேன். டெல்லியில் எங்களை மக்கள் மீண்டும் தேர்வு செய்திருக்கிறார்கள். எங்களுக்கு போதுமான அனுபவம் இருக்கிறது. பழைய தலைவர்கள் தோற்றிருக்கிறார்கள், புதியவர்களான நாங்கள் வென்றுள்ளோம். புது சிந்தனைகளோடு வேலை செய்வோம்” என்று கூறியுள்ளார் பகவந்த் மான். பஞ்சாப் முதல்வராக பதவியேற்ற பகவந்த் மானுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.