வங்கியில் விவசாயி முதலீடு செய்த ரூ.17 லட்சத்தை ஊழியர்கள் கையாடல்..!

வங்கியில் விவசாயி முதலீடு செய்த ரூ.17 லட்சத்தை ஊழியர் கையாடல் செய்த நிலையில், அந்த தொகையை திருப்பி வழங்காமல் இழுத்தடித்ததால் வட்டியுடன் வழங்க வேண்டும் என்று நுகர்வோர் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெரியநாயக்கன் பாளையத்தை சேர்ந்தவர் ராமசாமி விவசாயி. இவர் விவசாயத்தில் கிடைத்த வருமானம் ரூ.17 லட்சத்தை பெரியநாயக்கன் பாளையத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி கிளையில் முதலீடு செய்தார். இந்தநிலையில் அவர் முதலீடு செய்த தொகையை வங்கி ஊழியர் மங்களதீபா, சிவக்குமார் ஆகியோர் கையாடல் செய்துவிட்டதாகவும், எனவே இதுதொடர்பாக ராமசாமி புகார் மனு அளிக்குமாறும் வங்கி நிர்வாகம் ராமசாமியிடம் தெரிவித்து உள்ளது. ராமசாமியும் புகார் மனு அளித்தார். இந்தநிலையில் வங்கியில் நடைபெற்ற மோசடி தொடர்பாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.

ஆனால் ராமசாமி முதலீடு செய்த தொகை ரூ.17 லட்சம் இன்னும் அவருக்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. வங்கிக்கு பலமுறை அலைந்து திரிந்தும் பல ஆண்டுகளாக வராததால் அவர் கோவை நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். முதலீட்டு தொகை கையாடல் செய்யப்பட்டு உள்ளதாலும், பணம் திரும்ப கிடைக்காததாலும் வங்கி மீதான நம்பகத் தன்மை போய்விட்டது. முதலீடு செய்த பணத்தை வட்டியுடன் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறி இருந்தார்.

மனுவை நீதிபதி ஆர்.தங்கவேலு, நுகர்வோர் கோர்ட்டு உறுப்பினர்கள் டி.மாரிமுத்து, வி.சுகுணா ஆகியோர் விசாரித்து உத்தரவு பிறப்பித்தனர். அதில் வங்கி நிர்வாகம் முதலீடு செய்த தொகை ரூ.17 லட்சத்தை 9 சதவீதம் வட்டியுடன் வழங்க வேண்டும், மேலும் ரூ. 10 ஆயிரம் வழக்கு செலவுக்கும், ரூ.3 ஆயிரம் மனை உளைச்சலுக்கும் விவசாயி ராமசாமிக்கு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.