கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் ரோட்டரி கிளப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி இணைந்து, 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதனை சென்னை நீதிமன்ற மேனாள் நீதியரசர் பாஸ்கரன் துவக்கி வைத்தார்.

கோவையில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே விளையாட்டு திறன்களை ஊக்குவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும், கோவை ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பாக மாநில,மாவட்ட அளவிலான அத்லடிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. அதன்படி, மாணவ,மாணவிகளுக்கான 6 வது கிட்ஸ் அத்லெட்டிக் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டி, ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் இண்டஸ்ட்ரியல் சிட்டி, கோவை ஸ்போர்ட் அகாடமி இணைந்து, கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

ஒரு நாள் போட்டியாக நடைபெற்ற இதில், கோவை மற்றும் அதன் சுற்றுப்புற பல்வேறு பகுதிகளில் உள்ள 30 பள்ளிகளில் இருந்து, ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். ஜூனியர் குழந்தைகளுக்காக நடைபெற்ற இதில், ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் ஆர்வமுடன் தங்களது விளையாட்டு திறன்களை நிரூபித்தனர்..









