இறந்தவர்கள்,இடம் மாறியவர்களை வைத்து, திமுக கள்ள ஓட்டு போடும் திட்டத்தை, எஸ்.ஐ.ஆர் பணி தடுத்துள்ளது என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என சுட்டிக்காட்டிய அவர், சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது என்றார். திண்டிவனத்தில் பள்ளி மாணவியை காவலர் ஒருவரே பாலியல் துன்புறுத்தல் செய்துள்ள சம்பவம், பெண்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார். திமுக ஆட்சியில் இதுவரை 699 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருப்பதாகவும், இதற்கான 104 கோடி நிவாரணம் கொடுக்கப்பட்டுள்ளதாக திமுக அமைச்சரே கூறி இருப்பதை இதற்கு சாட்சி என்றார்.
கடந்த 50 மாத திமுக ஆட்சியில், 6400 கொலைகள் நடந்துள்ளதாக சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி, தமிழகத்தில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதே, கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் அரங்கேற காரணம் என்றார். தமிழகத்தில் நிரந்தர டிஜிபி நியமிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை தமிழக அரசு நியமிக்காமல் அவர்களுக்கு தேவையான ஆட்களை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
எஸ். ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு திருத்த திட்டத்தின் மூலம், ஒவ்வொரு சட்டமன்றம் வாரியாக இறந்தவர்கள், வீடு மாறியவர்கள், வெளியூர் மற்றும் வெளிநாட்டுக்கு சென்றவர்கள் என இல்லாதவர்களை பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. 21 ஆண்டுகளுக்குப் பின் முழுமையான வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் இந்த பணியை, திமுக எதிர்ப்பதற்கு காரணம் அவர்கள் பேரில் கள்ள ஓட்டு போட முடியாது என்பதால் தான் என்றார். தேர்தலுக்கு முன்பாக 5 நாட்களில் பூத் ஸ்லிப் தமிழகம் முழுதும் விநியோகிக்க முடியும் என்ற நிலை இருக்கும் சூழலில், எஸ்.ஐ.ஆர் திருத்த பணிகளுக்கு, ஒரு மாத கால அவகாசம் போதுமானது என்றார். எஸ்.ஐ.ஆர் பொதுமக்களின் வாக்குரிமையை பறிக்கும் திட்டம் என திமுக மக்களிடையே பொய் பிரச்சாரம் செய்து வருகிறது என்றார்.
அதிமுக ஆட்சி குறித்து எந்த குறையும் சொல்ல முடியாமல் தான் திமுக, அதிமுக பிஜேபி கூட்டணி குறித்து பேசி வருகிறது என்றார். வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நெருங்கும் சமயத்தில், அதிமுக தலைமையில் தான் கூட்டணி இருக்கும்,தொகுதி ஒதுக்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும் என கூட்டணிக்குள் முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். வரும் தேர்தலில் திமுக, தாவேக்கா இடையே தான் போட்டி என விஜய் கூறியது தொடர்பான கேள்விக்கு, ஒவ்வொரு கட்சியினரும் அவரவர் தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் இதுபோன்று பேசுவது இயல்புதான் என்றார்.
922 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என திமுக போலி பிரச்சாரம் செய்துள்ளதாக குறிப்பிட்ட எடப்பாடி பழனிச்சாமி, அப்படியென்றால் இதுவரை தமிழகத்தில் 25 லட்சம் பேருக்காவது வேலை கிடைத்திருக்க வேண்டும். இதுபோன்று போலி பிரச்சாரங்களை தான் மக்களிடையே திமுக கொண்டு செல்வதாக குறிப்பிட்டார். புதிதாக அமைக்கப்பட்டு வரும் ஜல்லி குவாரிகள் ஒவ்வொன்றிற்கும், தலா 10 லட்சம் ரூபாய் திமுக லஞ்சமாக வாங்குவதாக குற்றம் சாட்டினார்.








