கோவையில் கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தியதாக 453 பேர் கைது – போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தகவல்.!

பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக கோவையில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தலை தடுக்க தீவிரமாக சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது .இந்த பிரிவின் கோவை மண்டலம் அலுவலகம் கோவையில் உள்ளது கோவை மண்டலத்தின் கீழ் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் ,சேலம், தர்மபுரி கிருஷ்ணகிரி ஆகிய 8 மாவட்டங்கள் உள்ளன. இந்த பிரிவின் போலீஸ் சூப்பிரண்டாக பாலாஜி சரவணன் உள்ளார். குடிமைப் பொருள் குற்றபுலனாய்வு பிரிவு போலீசார் எடுத்துள்ள நடவடிக்கை குறித்துபோலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் கூறியதாவது:- கோவை மண்டலத்தில் ரேஷன் அரிசி மற்றும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மானியமாக வழங்கப்படும் பொருட்களை கடத்திச் செல்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது .இதற்காக அமைக்கப்பட்டுள்ள தனிப்படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கோவை மண்டலத்தில் கடந்த 20 23 ஆம் ஆண்டில் மொத்தம் 2,074 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு700 டன் ரேஷன் அரிசி, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 551 வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இது தொடர்பாக 384 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் 18 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கடந்த ஆண்டில் ரேஷன் அரிசி கடத்தியதாக 2,906 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 889 டன் ரேஷன் அரிசி மற்றும் 889 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக மொத்தம் 453 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் 36 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மட்டும் 227 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 101 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 234 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் திருப்பூர் மற்றும் ஈரோட்டில் ஒன்றரை லட்சம் கிலோவுக்கு மேல் உரமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கோவை மண்டலத்தில் 24 மணி நேரமும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக பொதுமக்கள் தகவல் கிடைத்தால் எங்களுக்கு தாராளமாக புகார் தெரிவிக்கலாம். புகார் கொடுப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும். அத்துடன் ரேஷன் அரிசி கடத்துபவர்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. சட்ட விரோதமாக செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாயும். இவ்வாறு அவர் கூறினார்