இந்திய பெருங்கடலில் 6 மணி நேரம் பறந்த 4 ரபேல் விமானங்கள்- இந்தியாவின் அதிரடி.. உற்று நோக்கிய சீனா..!

சென்னை: இந்திய பெருங்கடலில் 4 ரபேல் விமானங்கள் திடீரென 6 மணி நேர நீண்ட பயிற்சியில் ஈடுபட்ட சம்பவம் கவனத்தை ஈர்த்து உள்ளது.

பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே கடந்த 2020ம் ஆண்டு இந்தியாவின் விமான படையில் ரபேல் விமானங்கள் இணைக்கப்பட்டது. ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிடம் இருந்து ரபேல் விமானங்கள் இந்தியா வந்த நிலையில் கடந்த சில வருடங்களில் கூடுதல் விமானங்கள் இந்தியா வந்துள்ளன.

2016ல் போடப்பட்ட ஒப்பந்தத்தின்படி 36 ரபேல் விமானங்கள் இந்தியா வர வேண்டும். மீதி விமானங்கள் இந்தியாவில் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் , பிரான்சின் டஸால்ட் நிறுவனத்தின் உதவியுடன் தயாரிக்கப்படும்.

இந்தியாவிற்கு 2020ல் ஜூன் மாதம் ஒரு ரபேல் விமானம் வந்தது. அதன்பின் 5 ரபேல் விமானங்கள் ஜூலை 29ம் தேதி வந்தது. இந்த ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது. இதற்கான இணைப்பு விழா திருவிழா போல நடந்தது. ஹரியானாவில் இருக்கும் அம்பாலா படைத்தளத்தில் இந்த விமானங்கள் இந்திய விமானப்படையுடன் இணைக்கப்பட்டது.

அதன்பின் மீண்டும் கூடுதலாக 5 ரபேல் விமானங்கள் இந்திய ராணுவத்துடன் இணைக்கப்பட்டது. இதற்கான விழா அம்பாலாவில் நடந்தது. ரபேல் விமானங்களை இந்திய ராணுவத்துடன் இணைக்கும் விழாவிற்கு பிரான்ஸ் பாதுகாப்பு துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்டி மற்றும் இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் வந்தனர். மிக பிரம்மாண்டமாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இந்த நிலையில்தான் மேற்கு வங்கத்தில் இருக்கும் ஹசிமாரா போர் விமான தளத்தில் இருந்து 4 ரபேல் விமானங்கள் அதிரடி போர் பயிற்சிகளை நேற்று மேற்கொண்டன. ரபேல் விமானங்கள் இந்திய பெருங்கடலில் வேகமாக சீறிப்பாய்ந்து பயிற்சி மேற்கொண்டது. 6 மணி நேரம் விடாமல் இந்த பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

பல விமானங்களுக்கு நடுவே செல்வது, அதிக ஜி போர்சை அடைவது, இலக்கை தாழ்வாக வேகமாக அடைவது, துல்லியமாக தாக்குவது, குறித்த நேரத்தில் திரும்பி வருவது போன்ற பயிற்சிகளை, சோதனைகளை வெற்றிகரமாக இந்த ரபேல் விமானங்கள் செய்து முடித்தன.

இந்திய பெருங்கடலில் இந்தியாவிற்கு சீனா அச்சுறுத்தல் அளித்து வரும் நிலையில்தான் ரபேல் விமானங்களை இந்தியா களமிறக்கி உள்ளது. சீனாவிடம் சுகோய் விமானங்கள் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 5ம் தலைமுறை விமானங்கள் நிறைய இருக்கிறது. அதேபோல் சீனாவிடம் ரபேலுக்கு பதில் ஜெ 20 போன்ற அதே திறன் கொண்ட விமானங்கள் உள்ளது. இதனால் சீனாவின் ஜெ வகை விமானங்களுக்கு பதிலடி கொடுக்க எங்களிடமும் விமானம் உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக இந்தியா ரபேல் விமானங்களை களமிறக்கி உள்ளது.

ரபேல் இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும். ரபேல் என்பது ஒரு வகையான, புதிய தலைமுறை போர் விமானம் ஆகும். இதன் மூலம் போர் சமயங்களில் ஒரு நாடு எளிதாக தாக்குதல் நடத்த முடியும். சர்ஜிக்கல் ஸ்டிரைக்குகளை எளிதாக தூரத்தில் இருந்து செய்ய முடியும். அமெரிக்காவின் எப் 14ஐ விட இது சக்தி வாய்ந்தது. அணு ஆயுதங்களை ஏந்தி சென்று தாக்கும் வல்லமை கொண்டது இந்த விமானங்கள். மிக மோசமான சூழ்நிலையில் கூட இது தாக்கு பிடிக்கும்.

ரபேலை வாங்குவதற்காக பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதாக பிரான்ஸ் கூறிய காரணத்தால் இந்த ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.