கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த சஞ்சய் குமார் (வயது 28) இவர் சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்து வடவள்ளியை சேர்ந்த கமலக்கண்ணன் ( வயது 30 ) உட்பட 3 பேரை கைது செய்தனர். இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு மேட்டுப்பாளையம் கோர்ட்டில் கையெழுத்து போட வேண்டும் என்ற நிபந்தனை அடிப்படையில் ஜாமின் கிடைத்தது. இதனால் அவர் நேற்று முன்தினம் காலையில் கையெழுத்து போட தனது நண்பர் விக்னேஷ்வரனுடன் மேட்டுப்பாளையம் சென்றார். கோர்ட்டில் கையெழுத்து போட்டுவிட்டு கோவை திரும்பினார். பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம் பாளையம் பகுதியில் கமலக்கண்ணன் விக்னேஸ்வரன் ஆகிய 2 பேரும் ஒரு பேக்கரியில் டீ குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் அரிவாளால் கமலக்கண்ணனை சரமாரியாக வெட்டினார்கள் .அதை தடுக்க வந்த விக்னேஸ்வரனுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. பிறகு அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கமலக்கண்ணன் விக்னேஸ்வரன் ஆகியோரை வெட்டியது கொலை செய்யப்பட்ட சஞ்சய் குமாரின் உறவினர்கள் என்றும் பழிக்குப் பழி கொலை செய்யும் நோக்கத்தில் சரமாரியாக வெட்டியதும் தெரிய வந்தது .இதையடுத்து காரமடையை சேர்ந்த குட்டி என்ற அரவிந்தன் ( வயது 24) பிரகாஷ் (வயது 25) கிருஷ்ணராஜ் (வயது 45) சுந்தர்ராஜ் (வயது 51) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். கமலக்கண்ணன் வெட்டிய அரிவாளை அத்திபாளையம் அருகே ஒரு புதருக்குள் மறைத்து வைத்திருப்பதாக அரவிந்தன் கூறினார்.. அதை பறிமுதல் செய்வதற்காக போலீசார் அரவிந்தனை அழைத்துக் கொண்டு அத்திப்பாளையம் சென்றனர் . அங்கு ஒரு புதருக்குள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தார். பின்னர் அவர் திடீரென்று போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓட முயன்றார். அங்கிருந்த ஒரு தரை பாலத்தில் இருந்து கீழே குதித்தார் . அதில் அவருடைய வலது கை எலும்பு முறிந்தது. இதையடுத்து அவரை போலீசார் மடக்கி பிடித்து மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது . இந்த சம்பவம் நடந்து 24 மணி நேரத்துக்குள் அரிவாளால் வெட்டிய 4 பேரை கைது செய்த போலீசாரை கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் .கார்த்திகேயன் பாராட்டினார்..
ஜாமினில் வந்தவருக்கு சரமாரி அரிவாள் வெட்டு – 4 பேர் கைது.!!
