273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம்..!

சென்னை: சென்னை விமான நிலையம், கார்கோ, துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 273 சுங்கத்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக இருந்த சீனிவாச நாயக், சுங்கத்துறையில் இருந்து ஜிஎஸ்டி துறைக்கு சமீபத்தில் மாற்றப்பட்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையராக, டெல்லி சுங்கத்துறை ஆணையராக இருந்த தமிழ் வளவன் பொறுப்பேற்றார்.

இந்நிலையில் சென்னை சுங்கத்துறையில் கூடுதல், இணை, துணை, உதவி ஆணையர்கள் உட்பட 273 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சென்னை விமான நிலைய சுங்கத்துறையில் இருப்பவர்கள், விமான நிலைய கார்கோ சுங்கப் பிரிவுக்கும், மற்றும் சென்னை துறைமுகம், ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகம், ஜிஎஸ்டி வரி விதிப்பு பிரிவு ஆகியவற்றுக்கும் இடமாற்றப்பட்டுள்ளனர்.

அதேபோல், ஜிஎஸ்டி பிரிவில் உள்ளவர்கள், சென்னை விமான நிலைய சுங்கத்துறை, விமான நிலைய கார்கோ பிரிவு, சென்னை துறைமுகம் ஆகிய இடங்களில் உள்ள சுங்கத்துறை அலுவலகங்களுக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு புதிதாக துணை ஆணையர்கள் மற்றும் உதவி ஆணையர்கள் 10 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, இது வழக்கமான இடமாற்றம்தான் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.