சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீடு – உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

மிழகத்தில் ஏழை மாணவர்களின் கல்விக்காக உருவாக்கப்பட்டது கல்வி உரிமைச் சட்டம். இந்த சட்டம் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டாய கல்வி பெற உதவியாக உள்ளது.

இந்தச் சட்டத்தின் படி ஏழை எளிய மாணவர்களுக்கு 25% இடங்களை தனியார் பள்ளிகளில் ஒதுக்க வேண்டும். அதோடு சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்று கல்வி உரிமைச் சட்டம் கூறுகிறது.

இந்நிலையில் மதுரை மாவட்டத்திலுள்ள அனுப்பானடி பகுதியை சேர்ந்த இரணியன் என்பவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கல்வி உரிமைச் சட்டத்தின் படி பெரும்பாலான சிபிஎஸ்இ பள்ளிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை. அது குறித்து பள்ளிகளிடம் சென்று கேட்டபோது அரசு முறையாக அந்த கட்டணத்தை செலுத்துவதில்லை என்று காரணம் சொல்கிறார்கள்.

எனவே ஏழை, எளிய மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட கல்வி உரிமை சட்டத்தின் படி சிபிஎஸ்இ மற்றும் ஐசிஎஸ்இ பள்ளிகளிலும் 25% இட ஒதுக்கீட்டை முறையாக அமல்படுத்த வேண்டும். அதன் மூலம் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய கல்வி முறையாக வழங்கப்படும் என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பள்ளி கல்வித்துறையின் முதன்மை செயலாளர், மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர், தனியார் பள்ளிகளின் இயக்குனர் மற்றும் சிபிஎஸ்இ மண்டல அலுவலர் ஆகியோர் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த விசாரணையை நீதிமன்றம் 4 நாட்களுக்கு தள்ளி வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.