2000 கி.மீ. இலக்கு… ரயிலிருந்து ஏவும் அக்னி-பிரைம் ஏவுகணை… சாதனை படைத்தது இந்திய ராணுவம்..!

டெல்லி: இந்திய ராணுவம் அக்னி-பிரைம் ஏவுகணையை ரயிலிருந்து ஏவி சோதனை செய்திருக்கிறது. இந்த சோதனை வெற்றிகரமாக நடந்திருப்பதாகவும், சுமார் 2,000 கி.மீ தொலைவில் உள்ள இலக்கை இது தாக்கி அழிக்கும் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருக்கிறார்.

இரண்டாம் தலைமுறை அக்னி-பிரைம் ஏவுகணை, 2,000 கி.மீ. தூரம் வரை தாக்கும் திறன் கொண்டது. இது மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முதல் முறையாக, பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ரயிலிலிருந்து நேற்று ஏவப்பட்டு சோதிக்கப்பட்டது.

இந்த ரயில் ஏவுதள அமைப்பை, முன் தயாரிப்புகள் ஏதுமின்றி, நாட்டின் ரயில்வே நெட்வொர்க் முழுவதும் எங்கு வேண்டுமானாலும் எடுத்து செல்ல முடியும். இது ராணுவ படைகளுக்குக் குறைந்த நேரத்தில் ஏவுகணைகளை ஏவும் திறனை வழங்குகிறது.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் ராஜ்நாத்சிங் பதிவிட்டிருப்பதாவது, “இடைநிலைத் தூரம் தாக்கும் அக்னி-பிரைம் ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்த DRDO, வியூகப் படைகள் கட்டளை மற்றும் ஆயுதப் படைகளுக்கு வாழ்த்துகள். இந்த வெற்றிகரமான சோதனை மூலம் ரயிலிலிருந்து ஏவுகணையை ஏவும் கேனிஸ்டரைஸ் செய்யப்பட்ட ஏவுதல் அமைப்பைக் கொண்ட ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவையும் இணைத்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளில் அக்னி-பிரைம் ஏவுகணை முக்கியமானது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் கடந்த 2011ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கின்றன. அக்னி ஏவுகணைகளில் பல வகைகள் இருக்கின்றன. இதில் சில வகை ஏவுகணைகள், 3,500 முதல் 5,000 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சமே, எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு சென்று, அங்கிருந்து ஏவ முடியும் என்பதுதான்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணை, இந்திய கால சூழலுக்கு ஏற்றார்போல சிறப்பாக தன்னை வடிவமைத்துக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகும். இதன் தாக்குதல் தன்மை மிகவும் துல்லியமானது. அதேபோல இதில் அணு குண்டுகளையும் பயன்படுத்த முடியும். சமீப காலமாக பாகிஸ்தானுடன் உரசல்கள் அதிகரித்திருக்கும் நிலையில், இந்த ஏவுகணை சோதனை ராணுவத்திற்கு கூடுதல் நம்பிக்கையை கொடுத்திருக்கிறது..