2 வாரங்களுக்கு போர் நிறுத்தம்

ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து தாக்குதல் மேற்கொண்டன. அதற்கு பதிலடியாக வளைகுடாவில் உள்ள அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தது. இதோடு ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் முடக்கியது. இதனால் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.இந்த நிலையில், பாகிஸ்தான் நாட்டு தலைவர்கள், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மேற்கொண்ட பேச்சுவார்த்தை மூலம் இந்த இடைக்கால போர் நிறுத்தம் ஏற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீரின் கோரிக்கையை ஏற்று ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைக்கிறேன். இரண்டு வார காலத்துக்கு ஈரான் மீது தாக்குதல் மேற்கொள்ள மாட்டோம். ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக, உடனடியாக மற்றும் சரக்கு கப்பல்கள் பாதுகாப்பாக கடக்க வேண்டும்” என சமூக வலைதளத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் இந்த இரண்டு வார கால போர் நிறுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளது. ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறும்போது, தங்களுக்கு எதிரான தாக்குதல் நிறுத்தப்பட்டால் தாங்கள் மேற்கொள்ளும் தாக்குதல் நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் புரட்சிகர இஸ்லாமிய படை உடன் இணைந்து ஹார்முஸ் ஜலசந்தியில் பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்படும் என அவர் கூறியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏப்ரல் 10-ம் தேதி அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் எனத் தெரிகிறது.இரு வார கால போர் நிறுத்தம் சார்ந்த முக்கிய நிபந்தனைகளை ஈரான் முன்மொழிந்துள்ளது. இதை ஈரானின் அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:இராக், லெபனான், ஏமன் மீதான போரை முழுவதுமாக நிறுத்த வேண்டும்.ஈரான் மீதான போரை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.பிராந்தியத்தில் அனைத்து விதமான மோதல்களையும் முழுமையாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது குறித்து பாதுகாப்பான கப்பல் போக்குவரத்து நெறிமுறைகளை நிறுவ வேண்டும். ஈரானை மீண்டும் கட்டமைப்பதற்கான செலவு தொகையை முழுவதுமாக வழங்க வேண்டும்.ஈரான் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்.அமெரிக்கா முடக்கிய ஈரானின் சொத்துகள், நிதியை விடுவிக்க வேண்டும்.

முன்னதாக, அணு ஆயுதம் தொடர்​பாக 10 நாட்​களுக்​குள் அமெரிக்காவுடன் ஒப்​பந்​தத்தை இறுதி செய்ய வேண்​டும்; ஹார்​முஸ் ஜலசந்தியை உடனடி​யாக திறக்க வேண்​டும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்​திருந்​தார். இதற்காக 10 நாட்​கள் காலக்கெடு​வை​யும் அவர் விதித்​திருந்​தார். அமெரிக்​கா​வின் நிபந்​தனை​களை ஏற்க ஈரான் ராணுவம் திட்​ட​வட்​ட​மாக மறுத்​து​விட்​டது.இதைத் தொடர்ந்து ஈரானின் கார்க் தீவு மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் நேற்று குண்​டுமழை பொழிந்​தன. ஈரானின் கச்சா எண்​ணெய், எரி​வாயு ஏற்​றும​தி​யில் 90% கார்க் தீவு வழி​யாக நடை​பெறுகிறது. அந்த தீவில் உள்ள 50-க்​கும் மேற்​பட்ட ராணுவ தளங்​கள் சக்​தி​வாய்ந்த குண்​டு​கள் மூலம் நேற்று தரைமட்டமாக்கப்பட்​டன.

மேலும், ஈரான் தலைநகர் டெஹ்​ரான் உட்பட அந்த நாட்டின் ரயில் கட்​டமைப்​பு​கள் மீது அமெரிக்​கா, இஸ்​ரேல் போர் விமானங்​கள் மிகப்​பெரிய தாக்​குதல்​களை நடத்தின. அமெரிக்​கா​வின் தாக்​குதலுக்கு பதிலடி​யாக குவைத்​தில் உள்ள அமெரிக்​கா​வின் அலி அல் சலேம் விமானப் படைத் தளத்​தின் மீது ஈரான் ராணுவம் ட்ரோன்கள் மூலம் தாக்​குதல் நடத்​தி​யது. இதில் 15 அமெரிக்க வீரர்கள் படு​கா​யம் அடைந்​தனர்.

மேலும் சவுதி அரேபி​யா, பஹ்ரைன், ஐக்​கிய அரபு அமீரகத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்​கள் மீது ஈரான் ராணுவம் நேற்று ஏவு​கணை, ட்ரோன்​கள் மூலம் தொடர் தாக்​குதல்​களை நடத்​தி​யது. இஸ்​ரேலின் ஹைபா நகரில் உள்ள அடுக்​கு​மாடி குடி​யிருப்​பில் நேற்று ஏவு​கணை விழுந்து வெடித்​துச் சிதறியது. இதில் 4 பேர் உயிரிழந்​தனர். ஏராள​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இஸ்​ரேலின் பல்​வேறு பகு​தி​கள் மீது ஈரான் ஏவு​கணை​கள் அலை, அலை​யாக தாக்​குதல் நடத்​தின.

ஈரான் புரட்​சிகர இஸ்​லாமிய படை நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில், “எங்​களது எரிசக்தி நிலை​யங்​கள், பாலங்கள் மீது தாக்​குதல் நடத்​தப்​பட்​டால் ஹார்​முஸ் ஜலசந்தி திறக்​கப்​ப​டாது. அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் மிரட்​டலுக்கு அஞ்ச மாட்​டோம். சர்​வ​தேச அளவில் பல ஆண்​டு​களுக்​கு கச்​சா எண்​ணெய்​, எரி​வா​யு கிடைக்​காத சூழலை ஏற்​படுத்​து​வோம்​” என கூறப்பட்டது.

டெஹ்ரானில் செயல்படும் இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்தியர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்கு விழிப்புடன் இருக்க வேண்டும். எரிசக்தி நிலையங்கள், ராணுவ தளங்கள் அருகே செல்ல வேண்டாம்” என கூறப்பட்டுள்ளது. மேலும் வளைகுடா நாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் பாதுகாப்பாக இருக்கும்படி அந்தந்த நாடுகளின் இந்திய தூதரகங்கள் அறிவுரைகளை வழங்கின.இதனிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில், “ஈரான் நாகரிகம் இன்றிரவு அழிக்கப்படும். அவர்களால் மீண்டெழ முடியாது. இதை நான் விரும்பவில்லை. ஆனால் இதை தவிர வேறு வழியில்லை. ஈரானில் முழுமையான ஆட்சி மாற்றம் ஏற்படும். மதவாத சக்திகள் அழிக்கப்படும். அந்த நாட்டில் புதிய புரட்சி மலரும். ஈரானின் 47 ஆண்டு கால அராஜகத்துக்கு நிரந்தரமாக முற்றுப்புள்ளி வைக்கப்படும்” என்று தெரிவித்திருந்தார்.

அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறும்போது, “ஈரானின் கார்க் தீவு மீது மிகப்பெரிய தாக்குதல் தொடுக்கப்பட்டு உள்ளது. எனினும் அந்த தீவில் உள்ள கச்சா எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ராணுவ தளங்கள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார். அமெரிக்க அதிபர் மாளிகை வட்டாரங்கள் கூறும்போது, “ஈரானுக்கு எதிரான போரில் நிச்சயமாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம்” என்று தெரிவித்தன. இந்தப் பின்னணியில் தற்போது இரு வார காலம் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது.