சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. அடுத்து மாணவர்கள் எதிர்பார்ப்பது மார்க் ஷீட் எப்போது வழங்கப்படும் என்பதைத்தான்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிகள் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்வு எழுதும் வகையில் துணை தேர்வு வரும் ஜூன் 25 முதல் தொடங்க உள்ளது. அதற்கான அட்டவணை நாளை (மே 9) வெளியிடப்படும். மே 14 முதல் மே 31 வரை துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 3 ஆம் தேதி தொடங்கி, 25 ஆம் தேதியுடன் நிறைவு பெற்றது. இந்த தேர்வை பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்களும், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகளும், தனித்தேர்வர்களாக 18 ஆயிரத்து 344 பேரும், சிறைவாசிகள் 145 பேரும் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர்.
இந்த தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன. தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்டார். தேர்வு எழுதியவர்களில் 95.03 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகள் முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 96.70 சதவிகிதமும், மாணவர்கள் 93.16 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்தாண்டு அரசுப் பள்ளிகள் 91.94 சதவிகிதமும், அரசு உதவிப் பெறும் பள்ளிகள் 95.71 சதவிகிதம், தனியார் சுயநிதிப் பள்ளிகள் 98.88 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட 3.54 சதவிகிதம் பேர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிக தேர்ச்சி பெற்ற மாவட்டமாக அரியலூர் உள்ளது. அரியலூர் மாவட்டத்தில் 98.2 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ் பாடத்தில் 135 பேர் 100 க்கும் 100 மதிப்பெண்கள் பெற்று அசத்தியுள்ளனர்.
12ஆம் வகுப்பு தேர்வெழுதிய 8,019 மாற்றுதிறனாளி மாணாக்கர்களில் 7,466 மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 140 சிறைவாசி மாணாக்கர்களில் 130 மாணாக்கர்கள் தேர்ச்சி. மேலும் மொத்தம் தேர்வெழுதிய 16,904 தனித்தேர்வர்களில், 5,500 மாணாக்கர்கள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
12 ஆம் வகுப்பு மாணவர்கள் வரும் மே 12 ஆம் தேதி முதல் மதிப்பெண்கள் பட்டியலை பள்ளிகள் வழியாக பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
மதிப்பெண் சான்றிதழ்கள் வெளியானதும் digilocker மூலமாக அதனை டவுன்லோடு செய்து கொள்ள முடியும். மொபைலில் டிஜிலாக்கர் செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். அதில் Get Started என இருப்பதை கிளிக் செய்து புதிய கணக்கை தொடங்க வேண்டும். மொபைல் எண் அல்லது இமெயில் முகவரி கொண்டு ஓடிபி எண் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆதார் எண்ணை கொண்டு கணக்கை தொடங்கிக் கொள்ளலாம்.
அதில் Tamil Nadu Marksheet என தேடி, அதில் பதிவு எண் , தேர்வு எழுதிய மாதம், ஆண்டு கொடுத்தால் மதிப்பெண் சான்றிதழ்கள் வந்துவிடும். அதனை டவுன்லோடு செய்து கொள்ளலாம். கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கும்போது இந்த சான்றிதழை பயன்படுத்தலாம்.