பூண்டி வெள்ளியங்கிரி மலையில் 2 பக்தர்கள் உயிரிழப்பு.பலத்த மழையால் மலையேற வனத்துறை தடை.

velliangiri malai 5

கோவை மே 26 கோவை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலை ஒட்டி வெள்ளியங்கிரி மலை உள்ளது .7-வது மலையில் சுயம்புலிங்கமாக வெள்ளிங்கிரி ஆண்டவர் வீற்றிருக்கிறார். இதனால் இந்த மலைக்கு ஏராளமான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வது வழக்கம். மலைக்குச் செல்லும் பாதை அடர்ந்த வனப்பகுதி என்பதாலும் திடீரென்று சீதோஷ்ண நிலை மாறும் என்பதாலும் ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல், மே ஆகிய 3 மாதங்கள் மட்டுமே மலை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது .அதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் பக்தர்கள் மலை ஏறு தற்கு அனுமதிக்கப்பட்டிருந்ததால் தினமும் ஏராளமான பக்தர்கள் மலையேறி தரிசித்து வந்தனர்.இந்த நிலையில் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கவுசல்யா (வயது 45) என்பவர் நேற்று முன்தினம் காலையில் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றார். பின்னர் அவர் 7-வது மலைக்கு சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு திரும்பினார் . 7-வதுமலையில் உள்ள ஆண்டி சுனை அருகே வந்தபோது திடீரென்று அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டது .உடனே அவர் சுனை அருகே படுத்துக்கொண்டார். இதை யடுத்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் 7-வது மலைக்கு சென்று பார்த்தபோது கவுசல்யா உயிரிழந்தது தெரிய வந்தது. பின்னர் அவரை மலைவாழ் மக்கள் டோலி கட்டி அடிவாரத்துக்கு எடுத்துச் சென்றனர். இது போன்று திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் ( வயது 23) இவர் தனது நண்பர்களுடன் கோவை வந்தார். இந்த நேற்று காலையில் வெள்ளிங்கிரி மலை ஏறினார். 7-வது மலைக்கு சென்றவர் சாமி தரிசனம் செய்துவிட்டு நண்பர்களுடன் கீழே இறங்கிக் கொண்டிருந்தார். 5 – வது மலைக்கு வந்தபோது அவருக்கு திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. இதனால் மயங்கி கீழே விழுந்தார். இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது .அவர் வந்து பார்த்தபோது செல்வக்குமார் உயிரிழந்து தெரிய வந்தது. இதை தொடர்ந்து அவரது உடல் டோலிகட்டி அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டது. வனத்துறையினர்இறந்து போன கவுசல்யா, செல்வகுமார் ஆகியோரின் உடலை ஆலாந்துறை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் 2 பேரதுஉடல்களையும் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெள்ளியங்கிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கூறியதாவது:- கோவைக்கு கனமழை காரணமாக “ரெட் அலர்ட் ” விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் வெள்ளிங்கிரி மலையில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைஏறுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் நுழைவாயில் மூடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.