184 அடி முருகன் சிலை!அதிகாரிகள் ஆய்வு!

184 அடி முருகன் சிலை அமைப்பதை  எதிர்த்த வழக்கில், வழக்கறிஞர்கள், அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை, மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை அமைய உள்ள இடத்தை நீதிமன்றத்திற்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்கள், நேரில் ஆய்வு செய்,து ஜனவரி 23 தேதிக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவை வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித் தடமான மருதமலை சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியமான பகுதி. நீலகிரி வனப்பகுதியில் இருந்து பிற வனப் பகுதிகளுக்குச் செல்ல யானைகள் இப்பகுதியை பாதையாக பயன்படுத்துகின்றன.இந்தப் பகுதியில் 110 கோடி ரூபாய் செலவில் 184 அடி உயரத்துக்கு முருகன் சிலை அமைக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன் வழக்கு தொடர்ந்தார்.

அமைய உள்ள முருகன் சிலை, 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள யானை வழித்தடத்தை எந்த வகையிலும் பாதிக்காது பக்தர்களால் வனவிலங்குகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய கண்காணிப்பு கோபுரத்தை அமைத்து வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பார்கள் என அறநிலையத்துறை வாதிட்டது.

இதை அடுத்து நீதிபதிகள், மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலையை நிறுவ முடிவு செய்து உள்ள இடத்தை, ஆய்வு செய்து அது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி 23 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.காலை முதல் வழக்கறிஞர்கள் மற்றும் அதிகாரிகள் 184 அடி உயரம் கொண்ட முருகன் சிலை அமைய உள்ள இடங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனர்.