பாதுகாப்பு பணிக்கு 1000 போலீசார் குவிப்பு..!

பொங்கல் விழாவையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கண்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் வருகிற 15-ம் தேதி பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, கோவை மாநகரில் உள்ள சுற்றுலா தலங்கள், வணிக வளாகங்கள், கோயில்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் நடைபெறும் விளையாட்டு, கலாசார நிகழ்ச்சிகளில் அதிகளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு, இன்று மாலை முதல் 18 -ம் தேதி வரை பொதுமக்களின் பாதுகாப்பு, சொத்துகளின் பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் குறைக்க மற்றும் விழாக்கள் சிறப்பாக நடைபெற விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதன்படி மாநகரில் 15 முக்கிய இடங்களில் 24 மணி நேரமும், 60 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத ரீதியான 6 முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் 24 மணி நேர கண்காணிப்பிற்கு 20 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாநகரில் உள்ள 7 பேருந்து நிலையங்களில் 24×7 முறையில் 82 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவை ரயில் சந்திப்பு உட்பட 6 ரயில் நிலையங்களில் 40 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகளவில் கூட்டம் கூடும் என எதிர்பார்க்கப்படும் 9 முக்கிய கோயில்களில் நாளை முதல் 16ம் தேதி வரை 40 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
செம்மொழிப் பூங்கா, உக்கடம் பெரியகுளம், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக தாவரவியல் பூங்கா, முத்தண்ணன் குளம், வாளாங்குளம், குறிச்சி குளம், வ.உ.சி. பூங்கா, கொடிசியா, கரட்டுமேடு முருகன் கோயில் உள்ளிட்ட 9 சுற்றுலா மற்றும் கூட்டம் கூடும் இடங்களில் 110 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாநகரில் உள்ள 7 போலீஸ் சரகங்களில் நடைபெறும் விளையாட்டு மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை கண்காணிக்க, ஒவ்வொரு சரகத்திலும் 1 எஸ்.ஐ. மற்றும் 4 போலீசார் அடங்கிய 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

அதேபோல ஒவ்வொரு சரகத்திலும், குற்றச்சம்பவங்களை தடுக்க ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அதில் 7 சரகத்திற்கும் சேர்த்து 30 எஸ்.ஐ. மற்றும் எஸ்.எஸ்.ஐ.,க்கள், 60 போலீசார் சம்பந்தப்பட்ட உதவி ஆணையர்களின் மேற்பார்வையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.மாநகர எல்லைகளில் 12 சோதனைச்சாவடிகள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன. இங்கு சிசிடிவி கேமிரா, பதிவேடுகள், குற்றவாளிகளின் டிஜிட்டல் ஆல்பங்கள் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சந்தேக வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனை செய்ய ‘வாகன்’ செயலி பயன்படுத்தப்படுகிறது.
மேலும், 28 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மற்றும் 59 இருசக்கர பீட் வாகனங்கள் 24×7 அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பெண்களின் புகார்களுக்கு விரைவாக பதிலளிக்க 7 பிங்க் ரோந்து வாகனங்கள் சாலைகளில் இயக்கப்படுகின்றன. அனைத்து ரோந்து மற்றும் “பீட்” போலீசாரின் தொடர்பு எண்கள் ” கியூ ஆர் ” குறியீடு மூலம் மாநகர போலீசாரின் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
கிராஸ் கட் ரோடு, ஒப்பனக்கார வீதி, பிக் பஜார் வீதி போன்ற வணிகப் பகுதிகளில் குற்றங்களைத் தடுக்கும் வகையில் 3 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட், பஜார் டி.கே. மார்க்கெட், காந்திபுரம் நம்பர் 8 மார்க்கெட், எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட் (மேட்டுப்பாளையம் சாலை) ஆகிய இடங்களில் பாதுகாப்பிற்காக 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடைபெறும் 10 வாரச் சந்தைகளிலும் போதிய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிக
கூட்டம் கூடும் இடங்களில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் தடுக்க, மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் போலீசார் நவீன கருவிகள் மூலம் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், வாகன நிறுத்தங்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் சோதனை மேற்கொள்வார்கள்
மேலும், ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய “லீமா” மொபைல் கேமிரா வாகனம் மாநகரின் முக்கிய இடங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளது. இதில் உள்ள 4 திசை கேமிராக்கள் மற்றும் 2000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களின் டிஜிட்டல் தரவுத்தளம் மூலம் கூட்டத்தில் உள்ள சந்தேக நபர்களை உடனடியாக அடையாளம் காணும் முடியும்.
பொங்கல் பண்டிகை நாட்களில் பொதுமக்கள் அமைதியாகவும் பாதுகாப்பாகவும் விழாவைக் கொண்டாட, மாநகர் முழுவதும் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதேபோல போதை பொருட்களை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் முதல் முறையாக சைபர் கிரைம் போலீசார் குஜராத் வரை சென்று 10 பேரை கைது செய்து வந்துள்ளனர். அவர்களுக்கு பாராட்டுகள்.
இவ்வாறு அவர் கூறினார்.பேட்டின் போது துணை கமிஷனர்கள் தேவநாதன், கார்த்திகேயன், திவ்யா ஆகியோர் உடன் இருந்தனர்.