ஆந்திராவில் வெப்ப அலையால் 4 நாளில் 18 லட்சம் கோழிகள் பலியானது. இதனால் ரூ.54 கோடிக்கு அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக கோழிப் பண்ணையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் படாலா சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஒருங்கிணைந்த கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் 1.20 கோடி வரையிலான முட்டையிடும் கோழிகள் உள்ளன. அவை ஒரு நாளைக்கு ஒரு கோடி முட்டைகள் வரை இடுகின்றன. இந்த மாதம் 20ம் தேதி முதல் அதிகரித்து வரும் வெப்பநிலையால் பண்ணைகளில் கோழிகள் அவதிப்படுகின்றன.தீவனத்தில் பயன்படுத்தப்படும் மருந்துகள் விலைகள் ஒரு மாதத்தில் கிட்டத்தட்ட இருமடங்காக உயர்ந்துள்ளன. கோடை வெப்பம், நஷ்டத்தை சந்தித்து வரும் கோழி வளர்ப்புத்தொழிலை மேலும் சேதப்படுத்துகிறது. பண்ணைகளில் உள்ள கோழிகளை வெயிலில் இருந்து பாதுகாக்க, கொட்டகைகளில் நீர்த் தெளிப்பான்கள் பொருத்தப்பட்டு தண்ணீர் வழங்கப்படுகிறது. கொட்டகையின் உள்ளே வெப்பநிலை உயர்வதை தடுக்க, தண்ணீரைத் துளித்துளியாகத் தெளிக்கும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.கொட்டகையைச் சுற்றி துணிகளும் சாக்குப்பைகளும் கட்டப்பட்டு தண்ணீரில் நனைக்கப்படுகின்றன. மின்சாரம் தடைபட்டால் ஜெனரேட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வளவு செய்தும், அதிக வெப்பநிலையால் கோழிகள் இறப்பதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். இறக்கும் கோழிகளுக்கு காப்பீடு இல்லாததால், இந்தத் தொழில் கடுமையான நஷ்டத்தைச் சந்தித்து வருகிறது.









