திருப்பத்தூர் அருகே திருமணமான 8 மாதங்களில் நில அளவையர் தூக்கிட்டு தற்கொலை.!!

 திருப்பத்தூர் அருகே  திருமணமான 8 மாதங்களில் நில அளவையர் தூக்கிட்டு  தற்கொலை.!!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள தாமலேரிமுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குபேந்திரன் மகன் திலீபன் (வயது 33). இவர், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், சர்வேயராகப் (நில அளவையர்) பணிபுரிந்து வந்தார். திலீபனும், அதே ஊரைச் சேர்ந்த திவ்யா என்ற 27 வயதுடைய பெண்ணும் கடந்த இரண்டு ஆண்டுகளாகக் காதலித்து, கடந்த எட்டு மாதங்களுக்கு முன் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. திவ்யா, புள்ளானேரி பகுதியிலுள்ள கிளினிக் சென்டரில், மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், ஆடி மாதப் பிறப்பையொட்டி, கடந்த வெள்ளிக்கிழமையன்று திவ்யாவை அவரின் பெற்றோர் தங்களது வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.

பின்னர், கணவன் குடும்பத்தினர் திவ்யாவை அழைத்து வருவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை உறவினர்களுடன் சென்றிருக்கின்றனர். அப்போது, இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. திவ்யாவை அவரின் பெற்றோர் அனுப்பவில்லை எனத் தெரிகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று மாலை தனது வீட்டின் மேல் மாடியிலுள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகன் தூக்கில் தொங்கியதைப் பார்த்து, பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து வந்த ஜோலார்பேட்டை போலீஸார், சர்வேயர் திலீபனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலைக்கான காரணம் குறித்து தீர விசாரித்து வருகிறார்கள்…

News Express Tamil

Related post