இரவு நேரங்களில் வழிப்பறி: இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது

 இரவு நேரங்களில் வழிப்பறி:  இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை கைது

காஞ்சிபுரத்தில் இரவு நேரங்களில் வழிப்பறியில் ஈடுபட்ட இரண்டு சிறுவர்கள் உள்பட 5 பேரை போலீசார் கைதுசெய்து அவர்களிடமிருந்து செல்ஃபோன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர். காஞ்சிபுரம் அடுத்த பிள்ளையார்பாளையம் பகுதியில் அமைந்துள்ள குரு கோவில் அருகே வசித்து வருபவர் பாலாஜி. இவர் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 6-ஆம் தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்துசென்று கொண்டிருந்தார் அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்ஃபோனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர் .

இதுகுறித்து பாலாஜி பெரிய காஞ்சிபுரம் போலீசில் புகார் செய்தார்.

இவ்வழக்கில் வழிப்பறி கொள்ளையர்களை விரைந்து கண்டுபிடிக்க காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா அறிவுரையின் பேரில், காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் உத்தரவின் பேரில் காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை மேற்பார்வையில், பெரிய காஞ்சிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமார் , சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை பல்வேறு இடங்களின் தேடி வந்தனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் சைபர் கிரைம் உதவியுடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலம் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (22), விருகம்பாக்கத்தில் சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூர் சேர்ந்த விவின் கேபா (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையொட்டி இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த செல்போன்கள் மற்றும் திருடிச்சென்ற இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர். இவ்வழக்கில் விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளை கண்டுபிடித்த காஞ்சிபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மற்றும் தனிப்படை காவலர்களை காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் வெகுவாக பாராட்டினார்.

தொழிற்சாலை நிறைந்த பகுதியாக இருக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரவு நேரத்தில் பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வருகின்ற இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் அடிக்கடி இவ்வாறு வழிப்பறி சம்பவங்கள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

News Express Tamil

Related post