தவறு செய்தவர்கள் மீது வழக்கு போடாமல் குற்றவாளிகளை விடுவித்த விவகாரம் :காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் – தஞ்சை சரக டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு

 தவறு செய்தவர்கள் மீது வழக்கு போடாமல் குற்றவாளிகளை விடுவித்த விவகாரம் :காவல் நிலையத்தில் பணியாற்றிய அனைவரையும் பணியிடை நீக்கம் – தஞ்சை சரக டி.ஐ.ஜி அதிரடி உத்தரவு

ஊரடங்கு காரணமாக தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலம் முழுவதும் அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டு இருந்தது. இதன் காரணமாக மதுக்குடிப்போர் அண்டை மாநிலமான புதுச்சேரிக்கு சென்று அங்கு மது பாட்டில்களை வாங்கி வந்து திருவாரூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விற்பனை செய்து வந்தனர். இதனை தடுக்கும் விதமாக காவல்துறையினர் பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் அமைத்து மது பாட்டில்களை கடத்தி வருபவர்களை கைது செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் இரு சக்கர வாகனத்தின் மூலமாக தங்களது உடல் முழுவதும் மதுபான பாட்டில்களை கட்டிக்கொண்டு கடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே ஆலத்தம்பாடி என்னுமிடத்தில் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை மறைத்து காவல்துறையினர் சோதனை செய்த பொழுது, இரண்டு இளைஞர்களின் உடல் முழுவதும் வெளிமாநில மது பாட்டில்களை கட்டி கொண்டு கடத்தி வந்தது தெரியவந்தது. அதனை அடுத்து இரண்டு இளைஞர்களையும் காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதே நேரத்தில் அவர்கள் மீது எந்தவித வழக்கும் போடாமல் காவல்துறையினர் அவர்களை விடுவித்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் இரண்டு நபர்களிடம் சாலையில் நின்று விசாரணை செய்ததை அந்தப் பகுதியில் இருந்த சில நபர்கள் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இதுகுறித்து திருவாரூர் மாவட்ட எஸ்பி சீனிவாசனுக்கு புகார் சென்றதையடுத்து இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்தியுள்ளார். விசாரணையில் சம்பவம் உண்மை எனவும் அதே நேரத்தில் வழக்குத் தொடுக்காமல் இருவரையும் காவல் துறையினர் விடுவித்தது உண்மை என தெரிய வந்ததையடுத்து, இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி சீனிவாசன் தஞ்சை சரக டிஐஜி பர்வேஷ் குமாருக்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளார். அதனடிப்படையில் காவல்துறையினரின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் திருத்துறைப்பூண்டி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ஞானசுமதி, உதவி ஆய்வாளர் வரலட்சுமி, தலைமை காவலர்கள் சண்முகநாதன், ராஜா, முதல் நிலை காவலர்கள் பாரதிராஜன், விமலா, உள்ளிட்ட ஒரு காவல் நிலையத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்த காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து தஞ்சை சரக டிஐஜி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கை காவல் துறையினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

News Express Tamil

Related post