மதுரையில் ஆவின் ஊழியர் வளர்த்து வந்த ராஜபாளையம் சிப்பிப்பாறை நாய்க்குட்டி திருடு போனது – திருடியவரை போலீசார் கைது..!

 மதுரையில் ஆவின் ஊழியர் வளர்த்து வந்த ராஜபாளையம் சிப்பிப்பாறை  நாய்க்குட்டி திருடு போனது  – திருடியவரை போலீசார் கைது..!

மதுரை : மதுரையில் ஆவின் ஊழியர் வளர்த்து வந்த நாயை திருடியவரை போலீசார் கைது செய்து, நாயை மீட்டனர்.மதுரை மேலமடை பகுதியைச் சேர்ந்தவர் சரவணக்குமார். இவர் ஆவின் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவர் வீட்டில் புறா, நாய், ஆடு என வீட்டு வளர்ப்பு பிராணிகளை வளர்த்து வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட ராஜபாளையம் சிப்பிப்பாறை கண்ணி இன 7 மாத நாய்க்குட்டி காணாமல் போனது. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், மதுரை அண்ணாநகர் போலீசில் நாய் காணாமல் போனது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சரவணக்குமாரின் வீட்டின் அருகே சலூன் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சியில் மினி சரக்கு வாகனத்தில் நாய் திருடிச்செல்லப்பட்ட காட்சிகள் பதிவாகி இருந்தது.

அதனைத்தொடர்ந்து, வாகன எண்ணை வைத்து தேடி வந்தனர். இதனிடையே மேலமடை சிக்னல் அருகே சிசிடிவியில் பதிவான எண் கொண்ட மினி சரக்கு வாகனம் வந்தது. இதை பார்த்து உடனடியாக வாகனத்தை போலீசார் உதவியுடன் நிறுத்தினர்.

விசாரணையில், அந்த வாகனம் மதுரை ஆழ்வார்புரம் பகுதியை சேர்ந்த அர்ஜூன் என்பவரது என தெரியவந்தது. மேலும் விசாரணை நடத்தியதில் நாய்க்குட்டியை அர்ஜூன் தனது வாகனத்தில் திருடிச் சென்றதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து அண்ணாநகர் போலீசார் அர்ஜூனை கைது செய்து, நாய்க்குட்டியையும், அதனை கடத்திச்சென்ற மினி சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

News Express Tamil

Related post