கள் இறக்கும் போட்டியில் முன்விரோதத்தில் கொலை:கரடி தாக்கியதாக நாடகமாடியது அம்பலம் – கொலையாளிகள் மூவர் கைது..!

 கள் இறக்கும் போட்டியில்  முன்விரோதத்தில் கொலை:கரடி தாக்கியதாக நாடகமாடியது அம்பலம் – கொலையாளிகள் மூவர் கைது..!

குலசேகரம் பகுதியை அடுத்த பேச்சிப்பாறை வலியமலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ். பழங்குடி வகுப்பைச் சேர்ந்த இவர் அந்தப் பகுதியில் விவசாயத் தொழில் செய்து வந்திருக்கிறார். ‘ஆழத்தெங்கு’ என அழைக்கப்படும் மரத்தில் கள் எடுக்கும் தொழிலிலும் சுரேஷ் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்தநிலையில், கடந்த 4.6.2020 அன்று கள் இறக்கும் தொழிலுக்குச் சென்றவர் மூன்று நாள்கள் ஆகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரின் மனைவியும் குடும்பத்தினரும் அவரைப் பல இடங்களில் தேடியுள்ளனர். ஆனாலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் சில நாள்களுக்கு பிறகு கள் எடுக்கச் சென்ற இளமூட்டுபாறை பகுதியில், உடம்பில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சுரேஷின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரின் மனைவி லீலா குலசேகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

போலீஸார் நடத்திய விசாரணையில் கரடி தாக்கியதில் சுரேஷ் இறந்ததாக அந்தப் பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். இது, அந்தச் சமயத்தில் பரபரப்பாகப் பேசப்பட்டது. பின்னர் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையில் அவர் கரடி தாக்கி இறந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இதையடுத்து, போலீஸார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், அந்த வழக்கில் குலசேகரம் காவல் நிலைய ஆய்வாளர் உமா தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டார். சுரேஷின் உடலில் இருந்த காயங்கள் அரிவாளால் தாக்கப்பட்டது போன்று இருந்தன. அது போலீஸாரின் சந்தேகத்தை வலுப்படுத்தியது. எனவே, அவரின் எதிரிகள் சிலரைப் பிடித்து விசாரித்தனர். அவர்களில் மணலோடை பகுதியைச் சேர்ந்த சிவராமன், மனோகரன், மணிகண்டன் மூன்று பேருக்கும் சுரேஷுக்கும் கள் இறக்குவது சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்ததாகவும். அவர்கள் மூன்று பேரும் சுரேஷைக் கொலை செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து போலீஸார் மூன்று பேரிடமும் நடத்திய விசாரணையில் கள் இறக்கும் தொழில், போட்டியில் ஏற்பட்ட முன்விரோதத்தில் சுரேஷின் குதிகால்களை அரிவாளால் வெட்டியும், உடம்புகளைக் காயப்படுத்தியும் கரடி தாக்கியது போன்ற கீறல்களை ஆங்காங்கே ஏற்படுத்தியிருப்பது தெரியவந்தது. மேலும் கரடி தாக்கியதாக அந்தப் பகுதியில் புரளியைக் கிளப்பி விட்டிருக்கின்றனர். இதையடுத்து சந்தேக மரணம் என்ற வழக்கு, கொலை வழக்காக மாற்றப்பட்டது. கொலையாளிகள் மூன்று பேரையும் குலசேகரம் போலீஸார் கைது செய்து, தக்கலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நாகர்கோவில் மத்திய கிளைச் சிறையில் அடைத்தனர்.

News Express Tamil

Related post