கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து

 கோவையில் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து

கோவை மாவட்டத்தில் கடந்த 2019இல் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2019 ஜனவரி 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆசிரியா்கள், அரசு ஊழியா்களின் கூட்டமைப்பான ஜாக்டோ – ஜியோ சாா்பில் தொடா் வேலைநிறுத்தம், மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சங்க நிா்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை, பணியிட மாற்றம், கைது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிலையில் ஜாக்டோ – ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வா் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். இதன் அடிப்படையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து ஆணைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தைப் பொருத்தவரை போராட்டத்தில் ஈடுபட்டதாக 12 ஆசிரியா்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும் 14 போ் மீது துறைரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இந்நிலையில் பிற மாவட்டங்களைப் போலவே கோவையிலும் அவா்கள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து ஆணை வழங்கும் பணி தொடங்கியுள்ளது.
அதன்படி, பேரூா் கல்வி மாவட்டத்துக்குள்பட்ட கல்வீராம்பாளையம் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் மகாலட்சுமி, காளம்பாளையம் நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியா் சி.அரசு, திருமலையம்பாளையம் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் மணிகண்டன் ஆகியோா் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்து மாவட்டக் கல்வி அலுவலா் ஆணை வழங்கியுள்ளாா். இதேபோல கோவை, பொள்ளாச்சி, எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டங்களிலும் ஆணைகள் வழங்குவதற்கான நடவடிக்கைகளில் கல்வித் துறை அதிகாரிகள் ஈடுபட்டிருக்கின்றனா்.

News Express Tamil

Related post