திருவாரூர் அருகே குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவன்: கட்டையால் அடித்து கொன்று கிணற்றில் வீசிய மனைவி..!

 திருவாரூர் அருகே குடிபோதையில் அடிக்கடி துன்புறுத்திய கணவன்: கட்டையால் அடித்து கொன்று கிணற்றில் வீசிய மனைவி..!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டையில், குடிபோதையில் அடித்துத் துன்புறுத்திய கணவரைக் கொன்று கிணற்றில் வீசிய பெண், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இந்தக் கொலைக்கு உடந்தையக இருந்ததாக, இந்தப் பெண்ணின் தந்தையும் கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மன்னார்குடி பரவாக்கோட்டை சாமிநாதன் தெருவைச் சேர்ந்தவர் பாண்டியன். இவர், பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் சில தினங்களுக்குமுன் பாண்டியன் திடீரென காணாமல் போனார். இரண்டு நாள்கள் கடந்த நிலையில் 19-ஆம் தேதி பாண்டியன் இதே பகுதியில் உள்ள பாழடைந்த கிணறு ஒன்றில் கை , கால்கள் கட்டப்பட்டு சடலமாக கிடந்திருக்கிறார்.

இதுகுறித்து பரவாக்கோட்டை காவல்துறையினருக்கு, ஊர்மக்கள் தகவல் தெரிவித்திருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினரின் முன்னிலையில் மன்னார்குடி தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து பாண்டியனின் உடலை மீட்டனர். பின்னர் பாண்டியனின் உடல், பிரேத பரிசோதனைக்காக, மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டார்கள்.

பெயிண்டர் பாண்டியனை அவரது மனைவி மகேஸ்வரி தனது தந்தை கோவிந்தராஜூடன் சேர்ந்து கட்டையால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து மகேஸ்வரி மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து பரவாக்கோட்டை காவல்துறையினர் கூறுகையில் , ”கைது செய்யப்பட்டுள்ள மகேஸ்வரி, தான் அளித்துள்ள வாக்குமூலத்தில், தனது கணவர் பாண்டியன், அடிக்கடி குடித்து விட்டு வீட்டுக்கு வந்து மதுபோதையில் தன்னையும், தனது மகன்களையும் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் தனது தந்தையுடன் சேர்ந்து, பாண்டியனை கட்டையால் அடித்துக் கொன்று உடலை கிணற்றில் வீசியதாக மகேஸ்வரி தெரிவித்ததார்” என்றனர்.

News Express Tamil

Related post