தமிழ்நாட்டில் ஊரடங்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது? – பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

 தமிழ்நாட்டில் ஊரடங்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது? – பா.ம.க நிறுவனர் ராமதாஸ் விமர்சனம்

சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் செல்வதற்காக இ – பதிவு செய்ய ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் அந்த வலைத்தளமே முடங்கி விட்டது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் ஊரடங்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பதை அறிந்து கொள்ளலாம் என பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு செயல்படுத்தப்படும் விதம் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான விமர்சனங்களை வெளிப்படுத்தியிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தின் விமர்சனம் தமிழ்நாட்டு மக்கள் மீதான அக்கறை காரணமாக வெளியிடப்பட்ட பொறுப்பான கருத்துகளாகும். தமிழ்நாட்டில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மே 10-ஆம் தேதி முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கும், மே 24-ஆம் நாள் முதல் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டன. ஜூன் 7-ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஊரடங்கு என்ற ஒன்று நடைமுறையில் உள்ளதா? என்று சந்தேகிக்கும் அளவுக்கு சென்னையில் தொடங்கி கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் பொதுமக்கள் இரு சக்கர ஊர்திகளிலும், மகிழுந்துகளிலும் சாலைகளில் வலம் வருவதை பார்க்க முடிகிறது. இதே வினாவைத் தான் உயர்நீதிமன்றமும் எழுப்பியிருக்கிறது. சாலைகளில் பொதுமக்கள் கட்டுப்பாடின்றி நடமாடுவதைக் கட்டுப்படுத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆணையிட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் கடந்த மாதம் 10-ஆம் தேதியில் தொடங்கி இப்போது வரை ஒரு மாதத்திற்கும் கூடுதலாக ஊரடங்கு நடைமுறையில் இருந்தாலும் கூட, ஒரு நாள் கூட அது முறையாக செயல்படுத்தப்படவில்லை என்பதை தமிழக முதல்வரால் கூட மறுக்க முடியாது. ஊரடங்கு என்றால் தவிர்க்க முடியாத தருணத்தைத் தவிர வேறு எதற்காகவும் வெளியில் செல்லக்கூடாது. ஆனால், சென்னையில் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த அனைத்து சாலைகளிலும் சிக்னல்கள் இயக்கப்படுகின்றன என்றால், அங்கு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது என்பதை நம்ப முடிகிறதா? சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கும், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் செல்வதற்காக இ – பதிவு செய்ய ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் அந்த வலைத்தளமே முடங்கி விட்டது என்பதிலிருந்தே தமிழ்நாட்டில் ஊரடங்கு எப்படி செயல்படுத்தப்படுகிறது? என்பதை அறிந்து கொள்ளலாம். சென்னையில் மே மாதத்தில் ஊரடங்கு அறிமுகம் செய்யப்பட்ட போது மளிகை மற்றும் காய்கறி கடைகள் 4 மணி நேரம் மட்டுமே இயங்க அனுமதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு இப்போது காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பெரும்பாலான கடைகள் 11 மணி நேரம் திறக்க அனுமதிக்கப்பட்டு உள்ளன. இவை ஒருபுறமிருக்க தளர்வுகள் இல்லாத ஊரடங்கு காலத்தில் இயங்க அனுமதிக்கப்பட்ட மூவாயிரத்திற்கும் மேற்பட்ட நடமாடும் கடைகளும் செயல்படுகின்றன. அவ்வாறு இருக்கும் போது சாலைகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் நடமாடுவதையும், பயணிப்பதையும் எப்படி தடுக்க முடியும்?

டெல்லியில் தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 300 என்ற அளவில் குறைந்து விட்டது. கர்நாடகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தமிழ்நாட்டை விட குறைவாகத் தான் உள்ளன. ஆனால், அந்த மாநிலங்களில் இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன. தமிழ்நாட்டிலும் அதே போன்ற கட்டுப்பாடுகள் இன்னும் சில வாரங்களுக்கு கடுமையாக செயல்படுத்தப்பட்டால் தான் கொரோனா பரவலைக் கட்டுக்கும் கொண்டு வர முடியும். ஆனால், இதை அரசும் உணரவில்லை. பொதுமக்களும் புரிந்து கொள்ளவில்லை என்பது தான் வேதனை.

தமிழ்நாட்டில் தினசரி கொரோனாத் தொற்று 35,000 என்ற உச்சத்துக்கு சென்று, இப்போது அதில் பாதியாக குறைந்திருக்கிறது என்பது உண்மை தான். இது தான் அரைகுறை ஊரடங்கால் கிடைத்த அரைகுறை பலனாகும். கடந்த ஒரு மாதத்தில் ஊரடங்கு கடுமையாக செயல்படுத்தப்பட்டிருந்தால், கொரோனா தொற்று பரவல் இப்போது கட்டுப்படுத்தப்பட்டிருக்கும். ஊரடங்கு முறையாக செயல்படுத்தப்படாததால் தான் தொற்று பரவலை இன்னும் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.
இனி வரும் நாட்களிலும் ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்கப்படாவிட்டால் அடுத்த சில நாட்களில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்து இருப்பதை மறுக்க முடியாது. இதை அரசும், பொதுமக்களும் உணர வேண்டும். கொரோனா ஆபத்திலிருந்து இன்னும் தமிழ்நாடு விடுபடவில்லை; இது கொண்டாட்டத்திற்கான நேரமும் அல்ல. தினசரி கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 500-க்கும் கீழாக குறைந்து விட்டாலும் கூட நாம் அபாயக் கட்டத்தை கடந்து விட்டதாக அர்த்தமல்ல. தமிழக மக்களில் 70%-க்கும் கூடுதலானோருக்கு தடுப்பூசி போடப்பட்ட பிறகு தான் கொரோனா ஆபத்திலிருந்து நாம் தப்பிக்க முடியும். அதற்கு இன்னும் பல மாதங்களோ, சில ஆண்டுகளோ ஆகலாம். அதுவரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், இல்லா விட்டாலும் பொதுமக்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும். ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை சென்னையில் லட்சங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் கூட, சிகிச்சை பெற மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாத நிலை இருந்ததை நாம் மறந்து விடக்கூடாது. ஊரடங்கை தமிழக அரசு கடுமையாக நடைமுறைப்படுத்தாததும், மக்கள் கடைபிடிக்காததும் கொரோனாவுக்கு சிவப்புக் கம்பளம் விரிக்கும் செயலாகும். எனவே, தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி ஊரடங்கை கடுமையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், தமிழ்நாட்டு மக்களும் தங்களின் பொறுப்பை உணர்ந்து தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியில் வந்தாலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்”. இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

News Express Tamil

Related post