கோவை விளாக்குறிச்சி ரோடு சேரன் மாநகரை சேர்ந்தவர் ஹரிகுமார் துறைசாமி (வயது 62). இவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனக்கு எனது நண்பர் ஒருவர் மூலம் சென்னை பல்லாவரத்தை சேர்ந்த நவாஸ் அகமது என்பவர் அறிமுகமானார். அவர் என்னிடம் வெளிநாட்டில் வேலை வருங்கி தரும் வேலை செய்து வருகிறேன். கனடாவில் வேலை உள்ளது. உங்களுக்கு விருப்பம் இருந்தால் சொல்லுங்கள் அந்த வேலையை நான் உங்களுக்கு வாங்கி தருகிறேன் என்றார். அதற்காக ரூ.7 லட்சத்து 56 ஆயிரத்து 200 கேட்டார். அது உண்மை என நம்பி நானும் எனது வங்கி கணக்கில் இருந்து பணத்தை அனுப்பினேன். ஆனால் இதுநாள் வரை அவர் எனக்கு வேலை வாங்கி தரவில்லை. வேலை குறித்து கேட்டால் அவர் சரியான பதில் கூறாமால் இருந்து வருகிறார். அப்போது தான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன்.
எனவே எனக்கு கனடாவில் வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று மோசடி செய்த நவாஸ் அகமது மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் கூறும்போது, வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருகிறேன் என கூறுபவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். முறையான ஆவணங்கள் இன்றி இதுபோன்ற முயற்சிகளை யாரும் எடுக்க வேண்டாம். வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்கள் வேலைக்கு கொடுக்கும் நிறுவனங்கள் குறித்த அனைத்து தகவல்களையும் கேட்டறிந்த பின்னர் முறைப்படி விண்ணப்பித்து அந்த வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் என்றார்.
Leave a Reply