மருத்துவர்களுக்கு தெரியாமல் தடுப்பூசிகளை தனியார் பனியன் நிறுவனங்களுக்கு வழங்கியதாக: திருப்பூர் மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத்துறை குற்றச்சாட்டு

 மருத்துவர்களுக்கு தெரியாமல்   தடுப்பூசிகளை  தனியார் பனியன்  நிறுவனங்களுக்கு வழங்கியதாக: திருப்பூர் மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத்துறை குற்றச்சாட்டு

பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய, தடுப்பூசிகளை மருத்துவர்களுக்கு தெரியாமல் தனியார் பனியன் நிறுவனங்களுக்கு வழங்கியதாக திருப்பூர் மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத்துறை குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருப்பூரில் பொதுமக்களுக்கு செலுத்த வேண்டிய 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளை, சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு தெரியாமல் திருப்பூரில் தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு வழங்கியது தொடர்பாக, மாநகராட்சி மீது மாவட்ட சுகாதாரத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

திருப்பூர் மாநகரில் 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. ஏராளமான மக்கள், மிகுந்த ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். அதேசமயம், நகரின் பல்வேறு இடங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு இருப்பதால், பொதுமக்கள் காத்திருந்து ஏமாற்றத்துடன் திரும்பும் நிலையும் அதிகரித்துள்ளது.

கடந்த 5-ம் தேதி மாவட்ட சுகாதாரத்துறையின் அலுவலகத்துக்கு 2000 கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 5 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்றடைய வேண்டிய, 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள், அரசு மருத்துவர்களுக்கே தெரியாமல் தனியார் பின்னலாடை நிறுவனங்களுக்கு மாநகராட்சி வழங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களின் அரசு மருத்துவர்களுக்கு எவ்வித தகவலும் தெரியாமல், 800-க்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. மாநகரின் 5 ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயனர் ஐடியும், கடவுச்சொல்லும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அவற்றை மாநகராட்சி அதிகாரிகள் முறைகேடாக பெற்று, தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், இத்தனை தடுப்பூசிகள் மொத்தமாக எடுத்து சென்றுள்ளனர். தனியார் நிறுவனத் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்துவதென்றாலும், அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் இன்றி, தனியாரிடம் எப்படி இப்படி மொத்தமாக தடுப்பூசிகளை மாநகராட்சி ஒப்படைக்கலாம்? 18 வயதுக்கும் மேற்பட்ட மற்றும் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு செலுத்த வேண்டிய தடுப்பூசிகள் இவை.

மாநகராட்சியின் 4-ம் மண்டலத்தில், இரண்டு மணிநேரத்தில் தடுப்பூசி போடப்பட்டதாக கணக்கும் காண்பிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி இப்படி தன்னிச்சையாக செயல்பட்டுள்ளது நியாயமற்ற செயல் என்றனர்.

இதுகுறித்து திருப்பூர் மாநகர் நல அலுவலர் பிரதீப் வாசுதேவ கிருஷ்ணகுமார் கூறியதாவது: அரசு விதியின் படி, புலம்பெயர் பின்னலாடை நிறுவனத் தொழிலாளர்களுக்கு முன்உரிமை அடிப்படையில் தடுப்பூசிகள் செலுத்த உத்தரவு உள்ளது. அதன்படி, பனியன் நிறுவனங்களில் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. போதிய அரசு மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் கொண்டு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. எதையும் மறைத்து செய்யவில்லை என்றார்.

News Express Tamil

Related post