கடவுளின் ஆதார் அட்டையை கேட்ட துணை கலெக்டரும் அதிகாரியும் : விவசாயி வேதனை

 கடவுளின் ஆதார் அட்டையை கேட்ட துணை கலெக்டரும் அதிகாரியும் : விவசாயி வேதனை

இந்தியாவில் இந்தியர்களின் ஒரே முகவரி ஆதார் எண். குமரி முதல் காஷ்மீர் வரை ஆதார் அட்டை இல்லாதவர்களே இருக்க முடியாது.

ஒரு மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை அனைத்து வகையிலும், அனைத்து இடங்களிலும் ஆதார் அத்தியாவசிய பொருளாக உள்ளது.

ஏன் ஒரு மனிதன் இறந்த பின்பும் கூட குடும்பத்துக்கு பண உதவி பெற அவரது ஆதார் வேண்டும்.இப்படியாக நின்றால், நடந்தால், படுத்தால் என எல்லா செயல்பாட்டிலும் மனிதர்களின் வாழ்வில் அங்கமாக மாறிப்போன ஆதார் அட்டை, ஒரு நாள் கடவுளுக்கு கூட தேவைப்படும் என்று யார் நினைத்து பார்த்து இருப்பார்கள்? ஆனால் இந்த நினைவை நிஜமாக்கும் வகையில் கடவுளுக்கே ஆதார் அட்டை கேட்ட வினோதமான சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. அந்த மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ளது குர்ஹாரா கிராமம். அந்த கிராமத்திலுள்ள ராம் ஜானகி கோவிலில் நிர்வாக அதிகாரியாகவும், தலைமை குருக்களாகவும் இருந்து வருபவர் மஹந்த் ராம்குமார் தாஸ். கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் கோதுமை பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன. அதில் இருந்து பெறப்பட்ட சுமார் 100 குவிண்டால் கோதுமையை அரசு சந்தை மூமாக விற்க மஹந்த் ராம்குமார் தாஸ் முடிவு செய்தார். இதற்காக அவர் ஏற்கனவே மற்றவர்களின் உதவியுடன் ஆன்லைனில் பதிவு செய்திருந்தார். இதனை தொடர்ந்து மஹந்த் ராம்குமார் தாஸ் கோதுமையை விற்க உதவியாளர்களுடன் மாவட்ட அரசு சந்தை அலுவலகத்துக்கு வந்தார். ஆன்லைன் பதிவை சரிபார்த்த மூத்த அதிகாரி ஒருவர், மஹந்த் ராம்குமார் தாஸிடம் ஆதார் அட்டை கேட்டார். இவரும் ஆதார் அட்டையை கொடுக்க, வாங்கிய வேகத்தில் அதனை திருப்பி ஒப்படைத்தார் அதிகாரி. ”உங்க ஆதார் அட்டை தேவையில்லை. கடவுள் ஆதார் அட்டை கொடுங்கள்” என்று சற்றும் அசராமல் கூறினார். இதை காதில் வாங்கி கொள்ளாத மஹந்த் ராம்குமார் தாஸ், ”சார் இது என் ஆதார் அட்டைதான் பாருங்க” என்று அதிகாரியிடம் தெரிவித்தார். இந்த கோதுமை விளைந்த நிலம் ராம் ஜானகி பெயரில்(கடவுளின் பெயர்) பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே கடவுள் ராம் ஜானகி ஆதார் அட்டைதான் எனக்கு வேணும். அப்பதான் பயிரை விற்க முடியும்” என்று அதிகாரி மறுபடியும் கூலாக தெரிவிக்க, மஹந்த் ராம்குமார் தாஸ் ஒரு நிமிடம் உறைந்து போய் விட்டார். ”இப்ப கடவுளுக்கே ஆதார் அட்டை வேணுமா? மனுஷன்கிட்ட ஆதார் அட்டை வாங்கலாம்.? கடவுள்கிட்ட போய் எப்படியா ஆதார் அட்டை வாங்குவேன்? என்ன கொடுமை சார்? இது” என்று அவர் புலம்பி தவிக்க ”இதுதான் ரூல்ஸ். கடவுள் ஆதார் அட்டை இருந்தா கொடுங்க. இல்லாட்டி கிளம்புங்க” அதிகாரி கறாராக சொல்லி முடித்தார். இதுபற்றி மாவட்ட துணை கலெக்டரிடம் முறையிட்டபோது ”பயிர்களை விற்க நிலத்தின் பெயரில் உள்ள ஆதார் அட்டை கட்டாயம் வேணும்” என்று அவரும் கண்டிப்புடன் கூறினார். ”அட போங்கய்யா.. இனி சும்மா கூட இந்த பக்கம் வரமாட்டேன். இனி கோதுமைக்கு கூட தனியா நீங்க ஆதார் அட்டை கேட்டாலும் கேட்பீங்க” என புலம்பியபடி மஹந்த் ராம்குமார் தாஸ் குர்ஹாரா கிராமத்துக்கு நடையை கட்டினார்.

News Express Tamil

Related post