மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவையை அச்சுறுத்தும் கொரோனா: 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை..!

கோவையில் 3&வது அலையாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும்.
தடுப்பூசி
தகுதி உள்ள அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்டம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வருவதால் பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 3,653 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 225 ஆக உயர்ந்துள்ளது.
பெண் பலி
கொரோனா தொற்று காரணமாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 46 வயது பெண், கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 69 முதியவர் ஆகியோர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2,542 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்ற 1,383 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 58 ஆயிரத்து 447 ஆக உயர்ந்துள்ளது.
சிகிச்சை
தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 18 ஆயிரத்து 236 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டத்தில் கொரோனா நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் 4 ஆயிரம் ஆக்சிஜன் படுக்கைகள் உள்பட 12 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
92 சதவீதம் பேர்
2 தவணை தடுப்பூசி செலுத்தி லேசான அறிகுறிகளுடன் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்க ப்பட்டவார்களில் 92 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.மற்ற 8 சதவீதம் போர் மட்டுமே அரசு, தனியார் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது குறித்து சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறியதாவது:&
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரையின் அடிப்படையிலே கொரோனா நோயாளிகளுக்கு ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சையும், வீடுகளில் தனிமைப்படுத்திக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. லேசான பாதிப்பு உள்ளவர்களை கொரோனா சிகிச்சை மையங்களிலும், தீவிர பாதிப்பு உள்ளவர்களை அரசு ஆஸ்பத்திரிகளிலும், நோயாளிகளின் விருப்பத்துக்கு ஏற்ப தனியார்ஆஸ்பத்திரிகளிலும் அனுமதிக்கப் படுகின்றனர்.
கட்டுப்பாட்டு அறை
மாவட்டத்தில் தற்போது சிகிச்சையில் உள்ள 18 ஆயிரத்து 447 பேரில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வீட்டுத் தனிமையிலும், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஆஸ்பத்திரிகள், கொரோனா சிகிச்சை மையங்களிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். வீடுகளில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளவர் களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது. தினசரி கட்டுப்பாட்டு அறையில் இருந்து அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.