மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
பொங்கல் பரிசுகளை தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள்;கறுப்பு பட்டியலில் வைக்க முதல்வர் அறிவிப்பு..!

சென்னை: பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.இதில் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வர் எச்சரித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு 21 பொருள்கள் அடங்கிய பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்திருந்தது.ஆனால், அந்த பரிசுதொகுப்பு பொருட்கள் விநியோகிக்கப்பட்ட நாளிலிருந்தே ஏகப்பட்ட புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.
விநியோகிக்கப்படும் பொருள்களின் தரம் சரியில்லை, புளியில் பல்லி, பரிசு பணம் எங்கே என்று பல்வேறு விமர்சனங்களும், குற்றச்சாட்டுகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பொங்கல் பண்டிகையே முடிந்த பிறகும்கூட, இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு மீதான குற்றச்சாட்டுகள் குறையவில்லை.எதிர்க்கட்சிகள் இதை ஒரு பிரச்சாரமாகவே கையில் எடுத்து கொண்டுவிட்டன.அதிலும் எடப்பாடி பழனிசாமி முதல் ஆளாக நின்று, திமுகவை சரமாரி விமர்சித்து கேள்வி கேட்டு கொண்டிருக்கிறார்.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்று, சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிசாமி, திமுக அரசின் மீது மிகப்பெரிய குற்றச்சாட்டையும் பகிரங்கமாக முன்வைத்தார். பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜாவும் தன்னுடைய சமீபத்திய் பேட்டிகளில் பெரும்பாலும், “புளியில் பல்லி” என்பதையே திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.இப்படி எதிர்க்கட்சிகளின் தொடர் புகார் மற்றும் குற்றசாட்டுகள் காரணமாக, தமிழக முதல்வர் ஸ்டாலின், பொங்கல் பரிசுத்தொகுப்பு விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த முடிவு செய்தார்.
அதன்படியே தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தில், நடந்த இக்கூட்டத்தில், கூட்டுறவுத் துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் நிதித் துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, உணவுப்பொருள் மற்றும் வழங்கல்துறையின் ஆணையர் ராஜாராம், உணவுப்பொருள் கொள்முதல் செய்த அதிகாரிகள் ஆகியோருடன் இது தொடர்பாக முதல்வர் ஆலோசித்துள்ளார்.
ஒருவேளை இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கியதில் தவறுகள் நடந்திருந்தால், விசாரணைக்குழு அமைக்கப்பட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது நடவடிக்கையை முதல்வர் எடுப்பார் என்றுகூட எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அதைவிட ஒருபடி மேலேபோய், பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் வழங்கிய நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில் வைக்க முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.இதில் தவறு செய்வோர் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
அதுமட்டுமல்ல, மக்களுக்கு அனைத்து வகையிலும் தரமான பொருட்களை மட்டுமே வழங்க வேண்டும் என்றும் முதல்வர் ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்திருக்கிறார். மேலும், அரசின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க இயலாது என்று கண்டிப்புடன் முதலமைச்சர் தெரிவித்துள்ளதுடன், நியாய விலைக் கடைகளில் பொது மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் எப்போதும் தரமானதாகவும், உரிய எடையிலும் விநியோகம் செய்யப்படுவதை அந்தந்த பகுதிகளிலுள்ள அரசு அலுவலர்கள் உறுதிப்படுத்திட வேண்டுமென்றும் அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.