இரிடியம் மோசடியில் ஈடுபட்ட பொக்லைன் டிரைவர் கைது

 இரிடியம் மோசடியில் ஈடுபட்ட பொக்லைன் டிரைவர் கைது

ராயக்கோட்டையில், இரிடியம் மோசடியில் ஈடுபட்ட பொக்லைன் டிரைவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து, இரண்டு இரிடியம், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அண்ணா நகரை சேர்ந்தவர் அன்பரசு, 26; பி.பி.ஏ., பட்டதாரி. இவரை தொடர்பு கொண்ட கும்பல், தங்களிடம் விலை உயர்ந்த இரிடியம் இருப்பதாகவும், அதை வீட்டில் வைத்து பூஜை செய்தால் செல்வம் கொழிக்கும் என்றும், கேரள மாநிலத்திற்கு எடுத்து சென்று விற்பனை செய்தால், 20 லட்சம் ரூபாய் வரை விலைபோகும் எனவும் ஆசைவார்த்தை கூறியது. அன்பரசு அப்படியே நம்பியதால், 50 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் இரிடியத்தை தருவதாக, அவரிடம் மர்ம கும்பல் பேரம் பேசியது. கடைசியாக, 10 ஆயிரம் ரூபாய் தருவதாக அன்பரசு கூறினார். இதையடுத்து கடந்த, 6 ல், ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகே மர்ம கும்பலை வருமாறு கூறிய அன்பரசு, 10 ஆயிரம் ரூபாயை கொடுத்தார். ஆனால், இரிடியத்தை கொடுக்காமல் மர்ம கும்பல் ஏமாற்றியது. பணத்தை திரும்ப தருமாறு அவர் கேட்டார்.பணம் திரும்ப தராமல் மர்ம கும்பல் மிரட்டியதால், ராயக்கோட்டை போலீசில் நேற்று முன்தினம் இரவு புகார் செய்தார். விசாரணையில், ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத், தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கரகூரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜா, 32, சேலம் மாவட்டம், முத்துநாயக்கனஹள்ளியை சேர்ந்த சரவணன் ஆகியோர், அன்பரசுவை ஏமாற்றியது தெரிந்தது. ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத்திடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரண்டு இரிடியத்தை வாங்கி கொண்டு, சேலத்தில் உள்ள சரவணனிடம் வழங்க, நேற்று ராஜா பைக்கில் சென்று கொண்டிருந்தார். இந்த தகவலை அறிந்த இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தலைமையிலான போலீசார், ராயக்கோட்டை பஸ் ஸ்டாண்ட் அருகே, ராஜாவை மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு பாஸ்பரஸ் இரிடியம், யமஹா எப்.இசட் பைக் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள மஞ்சுநாத், சரவணன் ஆகியோரை, போலீசார் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இரு பாஸ்பரஸ் இரிடியம் அசலா என்பது ஆய்வுக்கு பின் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

News Express Tamil

Related post