ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட 7 வடமாநில கொள்ளையர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

 ஏ.டி.எம் கொள்ளையில் ஈடுபட்ட 7 வடமாநில கொள்ளையர்களுக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை

கோவை பீளமேடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் சாலையில் உள்ள இரு தனியார் வங்கி ATM மெசின்கள் கடந்த 2017 டிசம்பர் 12ஆம் தேதி இரவு உடைக்கப்பட்டு ரூ. 3005200 /- கொள்ளை அடிக்கப்பட்டது. மேலும் இதே இரவில் அவினாசி சாலையில் உள்ள மற்றொரு தனியார் வங்கி ATM உடைக்க முயற்சி செய்யப்பட்டிருந்தது.

இது குறித்து வங்கி அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் 3 வழக்குகள் பதிவு செய்த பீளமேடு காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வடமாநில கொள்ளையர்கள் சம்பந்தப்பட்டிருப்பதை கண்டுபிடித்த தனிப்படை காவல்துறையினர் இஸ்லாம்தின் (45) ஹரியானா, முஸ்தாக் (32) உத்தரபிரதேசம், ஜூல்பிகர் (25) புதுடெல்லி, மோசம்கான் (34) ராஜஸ்தான், ஸுபைர் (19) ராஜஸ்தான், அமித் குமார் (25) ஹரியானா, கபைர் (32) ஹரியானா, முபாரக் (30) ராஜஸ்தான், ஆமின் (35) ஹரியானா ஆகிய 9 கொள்ளையர்களை கைது செய்தும், கொள்ளை போன பணம், ஆயுதங்கள் மற்றும் கொள்ளையடிக்க பயன்படுத்திய வாகனங்களையும் கைப்பற்றினர்‌. இந்த வழக்கு விசாரணை கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட ஜூல்பிகர், மோசம் கான், சுபைர், அமித்குமார், சுபைர், முபாரக், ஆமின் ஆகிய 7 பேருக்கும் நீதிபதி திருஞானசம்பந்தம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார். சதிச் செயலில் ஈடுபட்டதாக தலா 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. மேலும் இரவில் அத்துமீறி ATM அறைக்குள் குற்ற நோக்குடன் நுழைந்ததற்காகவும், வங்கி பணத்தை திருடியதற்காகவும் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 6 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இத்தண்டனையை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது. மேலும் A5 கைபர் ஆயுதத்தை பயன்படுத்தியதற்காக ஆயுதச் சட்டப் பிரிவின் கீழ் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000 அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதே போல் ATM-யை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்த வழக்கில் 7 பேருக்கும் தலா 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் ரூ. 1000 அபராதம், அபராதம் கட்டத் தவறினால் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் வழங்கி இவற்றை ஏக காலத்தில் அனுபவிக்கும் படி தீர்ப்பளிக்கப்பட்டது. சுபைருக்கு ஆயுதச் சட்டம் பிரிவில் 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.5000/- அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் 3 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்டது. இஸ்லாமுதின், முஸ்தாக் ஆகியோர் மீதான விசாரணை தனியாக நீதிமன்றத்தில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

News Express Tamil

Related post